'மல்யுத்த'த்தில் வென்ற 'வீரர்கள்'- சர்ச்சைக்குரிய சம்மேளனத்தை அதிரடியாக சஸ்பெண்ட் செய்த மத்திய அரசு!
டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தை மத்திய பாஜக அரசு அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் புகாரில் சிக்கிய பாஜக எம்பி பிரஜ் பூஷண் ஆதரவாளர்களே மல்யுத்த சம்மேளன நிர்வாகிகளாக தேர்வானதற்கு மல்யுத்த வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சம்மேளனத்தையே மத்திய அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர் பிரஜ் பூஷண். பாஜக எம்பியான பிரஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி டெல்லியில் பெரும் போராட்டம் நடத்தினர். டெல்லி ஜந்தர் மந்தர் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு மல்யுத்த வீரர்களும் ஆதரவு தெரிவித்து போராடினர். நாட்டுக்காக பதக்கங்களை வாங்கு குவித்த மல்யுத்த வீரர்கள் டெல்லி தெருக்களில் நீதி கேட்டு போராடியது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகளும் நடைபெற்றன.

இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் பாஜக எம்பி பிரஜ் பூஷணின் ஆதரவாளர்களே நிர்வாகிகளாக வென்றிருந்தனர். பிரஜ் பூஷணின் நெருங்கிய கூட்டாளி சஞ்சய் சிங், மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரானார். இதனால் மல்யுத்த வீரர்கள் ரொம்பவும் கொதித்து போயினர்.
அத்துடன் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தாம் மல்யுத்த விளையாட்டுக்கே முழுக்கு போடுவதாக அறிவித்தார். மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியா தமக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்த கையோடு பத்ம விருதை டெல்லி நடைமேடையில் ஓரமாக வைத்துவிட்டுப் போனார். அதேபோல வீரேந்திர் சிங் யாதவ், தமது பத்ம விருதை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைப்பதாக அறிவித்தார். மேலும் சாக்ஷி மாலிக் வீட்டுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் சென்று ஆதரவும் ஆறுதலும் தெரிவித்திருந்தார்.
இந்தியாவுக்கு சர்வதேச அளவில் கவுரவமும் பதக்கமும் பெற்றுத் தந்து தலைநிமிர வைத்த மல்யுத்த வீரர்களின் கண்ணீரும் கோபமும் தொடர்ந்து வெடித்து கொண்டே இருந்தது. இதற்கு நீதியும் நியாயமும் கிடைக்காதா? என சமூக வலைதளங்களில் குமுறல்கள் கொட்டப்பட்டு வந்தது.
மல்யுத்த வீரர்களின் ஓராண்டுகால உக்கிரப் போராட்டத்துக்கு இறுதி முடிவாக, தற்போது ஒட்டுமொத்தமாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தையே மத்திய பாஜக அரசு அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications