நான் இருப்பதுதான் டெல்லி.. என் மனசில் இருப்பது நீங்கதான்.. உத்தராகண்ட் பிரச்சாரத்தில் நெகிழ்ந்த மோடி
டெல்லி: நான் டெல்லியில் வசித்தாலும், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு என் மனதில் தனி இடம் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 10ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 14ம் தேதி நடைபெறவுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14ந்தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் போட்டியிட்டு வருகின்றன.

உத்தரகாண்ட்
70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில், 2017ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக 57 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடித்தது. தற்போது பாஜக மீது உத்தரகாண்ட் மக்களுக்கு அதிருப்திகள் உள்ளன. வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரச் சிக்கல்கள், ஹரித்வார் கொரோனா பிரச்சனை உள்ளிட்ட மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகளை பாஜக சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

பிரசாரம்
இந்நிலையில் வரும் 14ம் தேதி உத்தரகாண்டில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பிரதமர் மோடி இன்று டிஜிட்டல் பிரசாரத்தை மேற்கொண்டார். இதற்காக பிரம்மாண்ட எல்.இ.டி அமைப்புகள் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டன. விஜய் சங்கல்ப் சபா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

பிரதமர் மோடி
உத்தரகாண்ட் மாநிலத்தை சிலர் சூரையாடி வந்தனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர்கள் டெல்லியில் பேருந்துகளில் பயணித்த உத்தரகாண்ட் மக்களை பேருந்தை விட்டு இறக்கி விட்டனர். பாஜக 'சார் தாம் சாலை' திட்டத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி செலவு செய்து 90 சதவிகித பணிகளை முடித்துள்ளோம். ஆனால் எதிர்க்கட்சிகள் இப்போது தான் அந்த பெயரை ஞாபகத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

இடம் உண்டு
தேர்தல் தினத்தன்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நான் டெல்லியில் இருந்தாலும், உத்தரகாண்ட் மாநில மக்களுக்கு என் மனதில் மிகப்பெரிய இடம் உள்ளது. நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். ஆனால் அவர்கள் நம்மை பின்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறார்கள். இங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி விஷத்தை விதைத்துள்ளது.

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியின் எண்ணம் என்ன என்பதை இந்த தேர்தல் காட்டிவிட்டது. சில வருடங்களுக்கு முன் டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ஆனால் உத்தரகாண்ட் மாநிலத்தை அவர்கள் ஒரு பொருட்டாக மதிக்காமல், ஓய்வெடுக்கும் இடமாக இந்த மாநிலத்தைப் பயன்படுத்தி வந்தார்கள் காங்கிரஸ் கட்சியினர். உத்தரகாண்ட் மாநிலத்தை சுற்றுலாத்தலமாக மாற்றவும், ஆன்மிகத்தலமாக மாற்றவும் காங்கிரஸ் கட்சி யோசித்ததே இல்லை'' என்று பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.












Click it and Unblock the Notifications