உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக... உச்சநீதிமன்றத்தில்...வேதாந்தா மேல்முறையீடு!!
டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டக்குழுவினர் பேரணி நடத்தினர். அப்போது அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாயினர். இந்த சம்பவம் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடந்தது. இதைத் தொடர்ந்து மே 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது. பின்னர் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்ச நீதிமன்றம் வேதாந்தா நிறுவனத்துக்கு தெரிவித்து இருந்தது.
இதையடுத்து, ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பல மாதங்களாக விசாரிக்கப்பட்டு வருகிறது. எனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு மற்றும் மதிமுக தலைவர் வைகோ உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்தால் தங்களது ஆலோசனையை கேட்காமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications