தீபாவளிக்கு மட்டும் தடை.. பாகிஸ்தான் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாட விட்டது ஏன்? சேவாக் ஆவேசம்
டெல்லி: இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியாவில் சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடியதை முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சனம் செய்துள்ளார்.
பாகிஸ்தான் வெற்றியை இங்குள்ள சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக கூறப்படுவதை அவர் நேரடியாக விமர்சனம் செய்யவில்லை, அதேநேரம் இவ்வாறு பட்டாசு வெடிப்பதற்கு அனுமதித்த நிர்வாகம் தீபாவளி நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்க ஏன் அனுமதிக்கவில்லை என்று அவர் கேள்வியை எழுப்பியுள்ளார் .
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு துபாயில் நடைபெற்ற நடப்பு 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையில், தங்களது முதலாவது ஆட்டத்தில் மோதின. இதில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்றது.

பட்டாசுகள்
பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில் டெல்லி உட்பட நாட்டின் சில பகுதிகளில் ஒரு சில ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலரும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் . பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவில் சிலர் இருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வேறு சிலரோ நன்கு ஆடிய வீரர்கள் எந்த அணியில் இருந்தாலும், அதற்கு ரசிகர்கள் இருப்பார்கள். அந்த வகையில் பட்டாசு வெடித்தது தவறு கிடையாது என்று கூறுகிறார்கள்.

ஏன் அனுமதி
இந்த நிலையில்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். விளையாட்டில் பெற்ற வெற்றி தோல்விகளை பட்டாசு வெடித்து கொண்டாடியது சரி அல்லது தவறு என்று அவர் நேரடியாக எதையும் கூறவில்லை. ஆனால் இப்போது மட்டும் ஏன் பட்டாசு வெடிக்க அனுமதித்தீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார் .

தீபாவளிக்கு மட்டும் பாடம் எடுக்கிறார்கள்
இதுபற்றி அவர் கூறுகையில், தீபாவளி நேரத்தில் பட்டாசுகள் வடிப்பதற்கு தடை இருக்கிறது. ஆனால் கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு இந்தியாவின் சில பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் வெற்றி கொண்டாடப்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் பெற்ற வெற்றிக்காக அவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள் என்றே வைத்துக்கொள்வோம் ஆனால் பட்டாசு என்பது சுற்றுச்சூழலுக்கு தீமை விளைவிக்கிறது என்பது தீபாவளி நேரத்தில் மட்டும் பேசப்படுகிறது. தீபாவளி நேரத்தில் மட்டும் விழிப்புணர்வு பாடம் எங்களுக்கு புகட்டப்படுகிறது. இது இரட்டை வேடம். இவ்வாறு வீரேந்திர சேவாக் தெரிவித்திருக்கிறார்.

கவுதம் கம்பீர்
அதேநேரம் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீர் இன்னும் காட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் வெற்றி பெற்றதற்காக பட்டாசு வெடித்து கொண்டாடியவர்கள் இந்தியர்களாக இருக்க முடியாது, நாங்கள் எங்களுடைய வீரர்களுடன் துணை நிற்கிறோம். அவர்கள் செய்தது வெட்கக்கேடு என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லியில் தடை
டெல்லியில் 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுவதால் அப்போது மக்கள் பட்டாசு வெடிக்க முடியாது. பட்டாசு வெடிப்பதற்கு ஒரே நேரத்தில் மக்கள் ஒரே இடத்தில் கூடுவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்று பரவி விடும் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று டெல்லி அரசு தனது உத்தரவில் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications