துணை ஜனாதிபதி தேர்தல்: ”இந்தியா” கூட்டணி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிப்பு
டெல்லி: தமிழகத்தை சேர்ந்த சி.பி ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்து உள்ளது. இந்த நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில ஆளுநரும், தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்து உள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் நாளை மறுநாளுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ற நிலையில் நாளை சிபி ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

துணை ஜனாதிபதி வேட்பாளர்
துணை ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை நாடாளுமன்ற எம்.பிக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். அதன்படி பார்த்தால் தற்போது பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் எளிதில் வெற்றியை பெற்றுவிடுவார் சிபி ராதாகிருஷ்ணன். அதேவேளையில் இந்தியா கூட்டணியும் துணை ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், துணை ஜனாதிபதியை போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்ய வைக்க வேண்டும் என்று பாஜக தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
சுதர்சன் ரெட்டி தேர்வு
இதற்காக எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி ஆதரவு திரட்டி வருகிறார். எனினும், வேட்பாளரை நிறுத்துவதில் இந்தியா கூட்டணி தீவிரமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துணை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று முடிவு செய்யும் அதிகாரம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளார் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி இந்தியா கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு இல்லை
முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டு இருக்கும் சிபி ராதாகிருஷ்ணன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால், திமுகவிற்கு இந்த விஷயத்தில் தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் மிக உயரிய பொறுப்புகளில் ஒன்றான துணை ஜனாதிபதி பதவிக்கு தமிழர் ஒருவர் தேர்வு ஆவதற்கு திமுக எதிராக வாக்களித்தால் அது விமர்சனத்திற்கு உள்ளாகும் நிலைமையும் இருப்பதால் இந்தியா கூட்டணி சார்பிலும் தமிழகத்தை சேர்ந்த ஒருவரை நிறுத்த ஆலோசனை நடைபெற்றதாக சொல்லப்பட்டது.
இதில் திமுக எம்.பி. திருச்சி சிவா அறிவிக்க வாய்ப்பு என தகவல்கள் வெளியாகி இருந்தது. இது பற்றி இன்று காலையில் டெல்லியில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த திருச்சி சிவா "அது எனக்கு தெரியாது. தலைவர்கள் முடிவு செய்வார்கள்" எனத் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான் ஆந்திரவை சேர்ந்த சுதர்சன் ரெட்டி இந்தியா கூட்டணி குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 9 ஆம் தேதி தேர்தல்
துணை ஜனாதிபதி தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 கடைசித் தேதியாகும். தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களுக்காக ஜூலை 21 அன்று பதவி விலகியதால் இந்தத் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ”இந்தியா” கூட்டணி கட்சிகளும் வேட்பாளாரை அறிவித்துள்ளது. இதனால் சிபி ராதாகிருஷ்ணன் vs சுதர்சன் ரெட்டி இடையே போட்டி எழுந்துள்ளது.
தேர்தல் நாளான செப்டம்பர் 9-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்ததும் மாலை 6 மணிக்கே வாக்குகள் எண்ணப்படும். அன்றைய தினமே முடிவுகள் தெரியும்.












Click it and Unblock the Notifications