“செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி தவறு செய்துவிட்டோம்”.. உச்ச நீதிமன்றம் கடும் கோபம்!
டெல்லி: "உங்களுக்கு ஜாமீன் வழங்கி நாங்கள் மிகப்பெரிய தவறை செய்துவிட்டோம். அந்த தவறை தற்போது நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்." என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2011- 2015 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியின்போது, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி. அப்போது அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தனர்.

செந்தில் பாலாஜி ஜாமீன்
ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் பல முறை நிராகரிக்கப்பட்டன. நீண்ட இடைவெளிக்கு பிறகு, கடந்த 2024 செப்டம்பர் 26 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அடுத்த 2 நாளில் மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றார் செந்தில் பாலாஜி.
இதையடுத்து அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 'தற்போது அமைச்சராக இல்லை என்று கூறி ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, ஜாமீன் கிடைத்த ஒருநாள் இடைவெளியில் மீண்டும் அமைச்சராகி உள்ளார். இதனால், அவருக்கு எதிராக சாட்சி அளிக்க யாரும் முன்வரமாட்டார்கள் என்பதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தார்.
சுப்ரீம் கோர்ட் விசாரணை
இந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் சாட்சிகளை கலைக்க முற்படுவதாக அமலாக்கத் துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், 'சாட்சிகளை கலைப்பார் என்ற அச்சம் இருந்தால், இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு வேண்டும்' என வாதிடப்பட்டது.
மெரிட் அடிப்படையில் ஜாமீன் தரவில்லை
இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்யது அவர் அமைச்சராக பதவியேற்பதற்காக அல்ல. மெரிட் அடிப்படையில் ஒன்றும் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை. அரசமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவை மீறியதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. . அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தினால் மட்டுமே ஜாமீன் வழங்கப்பட்டது.
செட்டில்மென்ட் செய்தது ஞாபகம் இல்லையா?
ஜாமீன் வழங்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் அவர் அமைச்சரானதை ஏற்க முடியாது. அமைச்சராக இல்லை என்பதால்தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், இப்போது அமைச்சராக இருக்கிறார். அப்போதைய சூழல் வேறு, இப்போதைய சூழல் வேறு. அமைச்சராக இருந்தபோது, செட்டில்மென்ட் செய்தது நினைவில்லையா? தற்போது மீண்டும் அமைச்சராக இருக்கும் அவர், சாட்சியங்களைக் கலைக்க மாட்டார் என்று எப்படி உறுதியளிக்க முடியும்? ஜாமீன் என்பது சாட்சியங்களைக் கலைப்பதற்கு வழங்கப்பட்ட உரிமம் அல்ல" எனக் காட்டமாகத் தெரிவித்தனர்.
தப்பு பண்ணிட்டோம்
உங்களுக்கு ஜாமீன் வழங்கி நாங்கள் மிகப்பெரிய தவறை செய்துவிட்டோம். அந்த தவறை தற்போது நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அமைச்சராக இல்லை என்ற அடிப்படையில் தான் ஜாமீன் வழங்கப்பட்டது. இது நீதிமன்றத்தை கையாளும் முறை அல்ல. அதன் பிறகு இந்த நீதிமன்றம் ஜாமீன் வழங்குவதில் தாராளமாக இல்லை என்று எங்களைக் குறை கூறாதீர்கள். PMLA வழக்கில் ஜாமீன் பெறுவது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்குத் தெரியும்" எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு, சாட்சியங்களைக் கலைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கருத வாய்ப்பு உள்ளதால் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால், இந்தக் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். "வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்றுவதை ஏற்க முடியாது. அதேபோல், செந்தில் பாலாஜி சாட்சியங்களைக் கலைக்க மாட்டார் என்ற உறுதியையும் ஏற்க முடியாது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அமைச்சர் பதவியா? ஜாமீனா?
மேலும், நீதிபதிகள், "அமைச்சர் பதவியில் நீடிக்க விரும்புகிறீர்களா, அல்லது மறுபடியும் சிறைக்குச் செல்லாமல் சுதந்திரமாக இருக்க விரும்புகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினர். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து ஜாமீன் பெற்றீர்கள். ஆனால், ஜாமீன் பெற்ற சில நாட்களிலேயே மீண்டும் அமைச்சரானது எப்படி?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து, இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருத்தை தெரிவிக்க ஏப்ரல் 28 வரை கால அவகாசம் வழங்கி, விசாரணையை ஒத்திவைத்தனர். வரும் 28 ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications