"ஆளுநர் முடிவில் தலையிட முடியாது.." ஜனாதிபதி கேள்வி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு! 8 பாயிண்டுகள்
டெல்லி: மசோதாக்களில் முடிவெடுப்பது தொடர்பாக ஆளுநருக்குக் காலக்கெடு விதித்தது குறித்து குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில் ஆளுநரால் ஒரு மசோதாவைக் காலவரை இல்லாமல் நிறுத்தி வைக்க முடியாது என்றும் அதேநேரம் ஆளுநர் ஒரு மசோதா மீது எடுக்கும் முடிவை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் செய்வதாகத் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில்.. காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் 14 கேள்விகளைக் கொண்ட விளக்கக் குறிப்பை அளித்திருந்தார்.

சுப்ரீம் கோர்ட்
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடந்தது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. அதில் இருக்கும் முக்கிய பாயிண்டுகளை நாம் பார்க்கலாம்.
1. மாநில அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டம் மூன்று ஆப்ஷன்களை மட்டுமே வழங்கியுள்ளது. அவர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பலாம் அல்லது மசோதாவை சட்டசபைக்கே திருப்பி அனுப்பலாம்.
தனிப்பட்ட முடிவு
2. ஒரு மசோதாவை மாநிலச் சட்டசபை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பும்போது, இந்த மூன்று ஆப்ஷன்களில் எதாவது ஒன்றை ஆளுநர் செய்ய முடியும். அது ஆளுநரின் தனிப்பட்ட முடிவுக்குட்பட்டது.
3. ஆளுநரின் முடிவை நீதிமன்றத்தால் கேள்விக்குள்ளாக்கப்பட முடியாது. ஆளுநர் ஏன் அத்தகைய முடிவை எடுத்தார் என்பதை நீதிமன்றங்கள் ஆராய முடியாது. அதேநேரம் ஒரு மசோதா மீது ஆளுநர் நீண்டகாலம் எந்தவொரு விளக்கமின்றி அல்லது காலவரையின்றி தாமதம் செய்தால்.. அதுபோன்ற சூழல்களில் நீதிமன்றம் தலையிடலாம். இது குடியரசுத் தலைவருக்கும் பொருந்தும்.
அதாவது சட்டசபை ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பும்போது, அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம், குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் அல்லது மசோதாவைச் சட்டசபைக்கு திருப்பி அனுப்பலாம். ஆளுநர் இதில் ஒரு முடிவை எடுக்கும்போது.. ஏன் அந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து ஆராய நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை. அதேநேரம் மசோதா மீது முடிவெடுப்பதில் நீண்ட தாமதம் இருந்தால் அதில் நீதிமன்றம் தலையிடலாம்.
நீதிமன்றம் தலையிடுமா?
4. ஆளுநரின் அதிகாரங்களை நீதிமன்றத்தால் ஆய்வு செய்ய முடியாது. ஆனால், இந்த விவகாரத்தில் காலதாமதம் ஏற்படும்போது மட்டுமே நீதிமன்றங்கள் இதில் தலையிடலாம்.
5. அரசியலமைப்புப் பதவி வகிக்கும் ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவருக்கு, மசோதாக்கள் மீது முடிவெடுக்க நீதிமன்றங்களால் காலக்கெடு நிர்ணயம் செய்ய முடியாது.
6. மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் நிறுத்தி வைக்கும்போது, ஒவ்வொரு முறையும் சட்டப்பிரிவு 143-இன் கீழ் குடியரசுத் தலைவர் மத்திய அரசின் ஆலோசனை பெற வேண்டியதில்லை.
8 பாயிண்டுகள
7. ஒரு சட்ட மசோதா தொடர்பான குடியரசுத் தலைவரின் அல்லது ஆளுநர் எடுக்கும் முடிவை நீதிமன்றத்தில் கேள்வி கேட்க முடியாது.
8. ஆளுநர் ஒரு மசோதாவில் ஒப்புதல் அளிக்கிறார் என்றால் அதை நீதிமன்றத்தால் மாற்றி அமைக்க முடியாது.
சுப்ரீம் கோர்ட் இன்று வழங்கிய தீர்ப்பில் இந்த 8 பாயிண்டுகள் தான் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications