பிரதமர் குறிப்பிட்ட மூக்கில் செலுத்தும் Nasal Vaccine.. எப்படி செயல்படும்? ஏன் முக்கியம்..முழு தகவல்
டெல்லி: பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றும் மூக்கில் நேரடியாகச் செலுத்தும் வேக்சின் பற்றிக் குறிப்பிட்டார். இந்தியாவில் பாரத் பயோடெக் உருவாக்கும் இந்த வேக்சின் கொரோனாவுக்கு எதிரான நமது போரை முற்றிலுமாக மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது.
நாட்டில் கொரோனா பரவின் 2ஆம் அலை தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் புதிதாக 1.06 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கொரோனா குறைந்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், பற்றாக்குறை காரணமாகப் பல மாநிலங்களில் தடுப்பூசி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி உரை
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக அரங்கில் இந்தியா முன் களத்தில் நின்று போராடி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, தீபாவளி வரை ஏழைகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், விரைவில் மூன்று தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் மூக்கில் நேரடியாகச் செலுத்தும் கொரோனா வேக்சின் தற்போது ஆய்வில் உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மூக்கில் செலுத்தும் வேக்சின்
அந்த மூன்று கொரோனா வேக்சின்களில் ஒன்று தான் மூக்கில் நேரடியாகச் செலுத்தக் கூடிய வேக்சின். அதாவது ஊசி, சிரஞ்சு என எதுவும் இல்லாமல் நேரடியாக ஒருவரின் மூக்கில் வேக்சினை செலுத்தலாம். இப்படி கொரோனா வேக்சினை நேரடியாக மூக்கின் வழியே நாசியில் செலுத்துவதால் நமக்குப் பல நன்மைகள் உள்ளன. சில சிக்கல்களும் உள்ள. இது குறித்து பார்ப்பதற்கு முன், முதலில் Nasal Corona vaccine என்றால் என்ன என தெரிந்துகொள்ளலாம்.

Nasal Corona vaccine என்றால் என்ன
அனைத்து நோய்களுக்கும் வேக்சின் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது ஊசிகளைக் கொண்டு செலுத்தக்கூடிய தடுப்பூசி தான். ஆனால், கொரோனாவுக்கு வேக்சினை கண்டுபிடிக்க பல்வேறு நிறுவனங்களும் முயன்று வருகின்றன. அதில் சில நிறுவனங்கள் மூக்கில் நேரடியாகச் செலுத்தக் கூடிய Nasal Corona vaccine குறித்து ஆய்வு செய்தன. அமெரிக்காவில் முதலில் குரங்குகள் மத்தியில் நடைபெற்ற ஆராய்ச்சியில் இது பலனளிப்பது தெரிய வந்தது.

பாரத் பயேடெக் நிறுவனம்
அமெரிக்காவை சேர்ந்த சில நிறுவனங்கள் இப்படி மூக்கில் செலுத்தக் கூடிய வேக்சின் பற்றிய ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அதேபோல இந்தியாவிலும் கோவாக்சினை உருவாக்கிய ஹைரதாபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், மூக்கில் செலுத்தக் கூடிய வேக்சின் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த வேக்சின் முதல்கட்டசோதனையில் உள்ளது.

இந்த ஆண்டிற்குள் 10 கோடி டோஸ்கள்
இந்த வேக்சின் நாசி சளிச்சுரப்பியில் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. இது கொரோனா பரவல் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவுவதையும் தடுக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பாரத் பயோடெக் நிறுவனம், மூக்கில் செலுத்தும் இந்த வேக்சின்களை சுமார் 10 கோடி டோஸ்கள் வரை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்மைகள் அதிகம்
மூக்கில் நேரடியாகச் செலுத்தக் கூடிய இந்த வேக்சின் பல்வேறு முறைகளில் நமக்கு நன்மை தரும் ஒன்றாகவே உள்ளது. இதன் மூலம் மிக எளிதாக அதிகப்படியான மக்களுக்கு வேக்சினை செலுத்த முடியும். ஊசி, சிரஞ்சு, பஞ்சு என எதுவும் தேவையில்லை. இதனால் மருத்துவ கழிவுகளும் குறைகிறது. குறிப்பாக, தற்போது சிறார்கள் மத்தியில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த வகை வேக்சின் அவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

சிறார்களுக்கு ஏற்றவை
முன்னதாக மூக்கில் நேரடியாகச் செலுத்தும் வேக்சின் கேம் சென்ஞராக இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் மூக்கில் செலுத்தும் வேக்சின் (nasal vaccines) குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானதாக அமையக் கூடும். இதன் மூலம் மிக எளிதாகத் தடுப்பூசியைக் குழந்தைகளுக்குச் செலுத்த முடியும். சுவாசப் பாதையிலிருந்தே அதன் பாதுகாப்பு தொடங்கிவிடுகிறது என்று தெரிவித்திருந்தார்.

சில சிக்கல்
மூக்கில் நேரடியாகச் செலுத்தக் கூடிய இந்த வேக்சின் மூலம் நமக்குப் பல நன்மைகள் உள்ளன. ஆனால், இந்த வேக்சின் இந்த ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வருவது கடினம் என்றே வுமியா சுவாமிநாதன் குறிப்பிட்டிருந்தார். அதேபோல இவை எந்தளவிற்கு தடுப்பாற்றலை தரும் என்பது நமக்கு இதுவரை தெரியாது. மேலும், இந்த வகை வேக்சினின் தடுப்பாற்றால் குறைந்த காலத்திற்கே நீட்டிக்கும் என்பதால், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை இந்த வேக்சினை நாம் தொடர்ந்து போட்டுக் கொள்ள வேண்டியிருக்கும்.

கேம் சேஞ்சர்
இதுபோன்ற சில விஷயங்கள் இருந்தாலும், மூக்கில் நேரடியாகச் செலுத்தும் இந்த வேக்சின் கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கியமான ஒன்று என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பிரதமர் மோடி குறிப்பிடத்தைப் போல இந்த வேக்சின் இந்த ஆண்டின் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வந்தால், அது கொரோனாவுக்கு எதிரான நமது போரை முற்றிலுமாக மாற்றியமைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications