மோடி வெற்றிக்கே ஆபத்து வந்திருக்கும்.. உபி-இல் இதுதான் பிரச்சினை! உடைத்து பேசிய பிரசாந்த் கிஷோர்
டெல்லி: உத்தரப் பிரதேச லோக்சபா தேர்தலில் பாஜக குறைவான இடங்களில் மட்டுமே வென்றது. குறிப்பாக வாரணாசி தொகுதியில் கூட மோடி பெற்ற வாக்கு சதவிகிதம் குறைந்தது. இதற்கிடையே இதற்கு என்ன காரணம் என்பதைப் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விளக்கியுள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் அவர்களால் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.

உபி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனதே இதற்குக் காரணமாகும். குறிப்பாக உபி-இல் முடிவுகள் பலருக்கும் அதிர்ச்சி தருவதாகவே இருந்தது.
பிரசாந்த் கிஷோர்: இதற்கிடையே உத்தரப் பிரதேசத்தில் என்ன நடந்தது.. அங்கு பாஜக சீட் குறைய என்ன காரணம் என்பதைப் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விளக்கியுள்ளார். உபி மாநில பாஜகவுக்கும் மத்திய தலைமைக்கும் ஒருங்கிணைப்பு இல்லாமல் போனதே இதற்குக் காரணம் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 சீட்கள் இருக்கும் நிலையில், அங்கே பாஜக 33 சீட்களில் மட்டுமே வென்றது. அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக்தளம் 2 இடங்களில் வென்றது. அதேநேரம் இந்தியா கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி 37 இடங்கள், காங்கிரஸ் 6 இடங்கள் என இந்தியா கூட்டணி 43 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்: உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய பிரசாந்த் கிஷோர், "உத்தரப் பிரதேச பாஜகவில் நிலவிய ஒருங்கிணைப்பு இல்லாத சூழலே இதற்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன்.. எளிதாக வெல்ல முடியும் என அவர்கள் நினைத்து இருக்கலாம். தலைமைக்கும் தொண்டர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் போய் இருக்கும். இது தொடர்பாக அவர்கள் விரிவான ஆய்வை செய்தாக வேண்டும். இல்லையென்றால் சிக்கல் தான்.
அகிலேஷ் யாதவ் மற்றும் ராகுல் காந்தி இணைந்து மேற்கொண்ட பிரச்சாரம் பாஜகவுக்கு கடும் சவாலைக் கொடுத்தது என்பதே உண்மை. அகிலேஷ் மற்றும் ராகுல் இணைந்தால் யோகியை தோற்கடிக்க முடியும் என்று மக்கள் இப்போது பேச தொடங்கியுள்ளனர். இது எதிர்வரும் சட்டசபைத் தேர்தலிலும் பாஜகவுக்குச் சிக்கலாக மாறலாம்.
பாஜக மனநிலை: இந்தத் தேர்தலில் இருந்த மற்றொரு முக்கிய சிக்கல் பாஜக தொண்டர்களின் மனநிலை.. எப்படி நாம் வெல்வோம் என்ற ஓவர் நம்பிக்கையில் அவர்கள் இருந்ததாகவே தெரிகிறது. மறுபுறம் எதிர்க்கட்சிகள் மிகத் தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். பாஜக 400 இடங்களில் வெல்வதைத் தடுக்க வேண்டும் என அவர்கள் மேற்கொண்ட பிரச்சாரத்திற்குப் பலன் கிடைத்துள்ளது.
வாரணாசியில் என்ன நடந்தது: உதாரணத்திற்கு நாம் வாரணாசியை எடுத்துக் கொள்வோம்.. இது மோடியின் சொந்த தொகுதி.. 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது மோடிக்குக் கிடைத்த வாக்குகள் 2 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் 20.9 சதவீதத்தில் இருந்து 41 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே அங்கு எல்லா தொகுதிகளிலும் நடந்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் 6.12 லட்சம் வாக்குகள் பெற்று, காங்கிரஸின் அஜய் ராயை சுமார் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த இரு லோக்சபா தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்தத் தேர்தலில் மோடி குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்று இருக்கிறார். 2014இல் 3.71 லட்சம் வாக்கு வித்தியாசத்திலும் 2019இல் 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் மோடி வென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications