4 மாசம் கூட ஆகல அதற்குள் விபத்து.. டெல்லி ஏர்போர்ட் விரிவாக்க பணிகளை செய்தது எந்த நிறுவனம் தெரியுமா?
டெல்லி: அதிகாலையில் கொட்டிய கனமழை காரணமாக டெல்லி ஏர்போர்ட் டெர்மினல் 1 பகுதியில் மிக மோசமான விபத்து அரங்கேறியுள்ளது. இதில் சிலர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் படுகாயமடைந்தனர். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த டெர்மினல் 1 பகுதி சமீபத்தில் தான் விரிவாக்கம் செய்யப்பட்டு இருந்தது. இதற்கிடையே அந்த விரிவாக்க பணிகளை மேற்கொண்டது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லியில் நேற்றைய தினம் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழையால் இன்று அதிகாலை டெல்லி ஏர்போர்ட் டெர்மினல் 1 பகுதியில் விபத்து நடந்தது. இதற்கிடையே விபத்து நடந்த டெல்லி ஏர்போர்ட் டெர்மினல் 1 தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

விபத்து: விபத்து நடந்த இந்த டெர்மினல் 1 பகுதி சமீபத்தில் தான் விரிவாக்கம் செய்யப்பட்டு இருந்தது. இதை கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருந்தார். இதில் தான் இந்த விபத்து நடந்துள்ளது. இதில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். பலருக்கும் காயம் மோசமாக இருக்கும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
"கொட்டிய மழை.. திடீரென காதை பிளந்த அந்த சத்தம்.." டெல்லி ஏர்போர்ட் விபத்து! அதிகாலை என்ன நடந்தது!
இதற்கிடையே விபத்து நடந்த டெல்லி டெர்மினல் 1 பகுதியை விரிவாக்கம் செய்த நிறுவனம் யார் என்பது குறித்த தகவல்களும் இப்போது வெளியாகி உள்ளது. இந்த முனையத்தை GMR தலைமையிலான DIALஇன் மேற்பார்வையின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் விரிவாக்க பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இருப்பினும், இடையில் கொரோனா ஏற்பட்டதால் விரிவாக்க பணிகள் தாமதமானது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் இந்த டெர்மினல் 1ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
யார்: ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் தலைமையிலான DIAL நிறுவனம் இந்த விரிவாக்க பணிகளை மேற்கொண்டு இருக்கிறது. இதை அந்த நிறுவனமே தங்கள் இணையதளத்தில் உறுதி செய்துள்ளது. டெல்லியில் விமான நிலையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைக் காட்டிலும் வேகமாக அதிகரித்தால் இந்த விரிவாக்கம் செய்யப்பட்டது. 2016இல் தயாரிக்கப்பட்ட மாஸ்டர் பிளான் படி விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆண்டுக்கு 4 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் டெல்லி ஏர்போர்ட் விரிவாக்கம் செய்யப்பட்டது. இது அதன் முந்தைய திறனைக் காட்டிலும் இரண்டு மடங்கு ஆகும். மேலும், விபத்து நடந்த டெர்மினல் 1 பகுதியின் பரப்பளவு 60,000 சதுர மீட்டரிலிருந்து 169,000 சதுர மீட்டராக விரிவாக்க பணிகளுக்குப் பிறகு அதிகரிக்கப்பட்டது. கேட்களின் எண்ணிக்கை, பார்கிங் பரப்பளவு அதிகரிக்கப்பட்டன.

விரிவாக்க பணிகள்: இப்படி 4 ஆண்டுகளாக விரிவாக்க பணிகள் நடந்து கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்ட ஏர்போர்ட் முனையத்தில் தான் விபத்து நடந்துள்ளது. அதிகாலையில் அங்குக் கனமழை கொட்டிய நிலையில், திடீரென இந்த முனையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மேற்கூரை ஷீட் சரிந்து விழுந்துள்ளன. மேலும் சப்போர்ட் பீம்களும் சரிந்துள்ளன. இதனால் டெர்மினலின் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்துள்ளன.
திரிணாமுல் தாக்கு: அதேநேரம் இந்த விபத்திற்குப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசே காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. லோக்சபா தேர்தலைக் கருத்தில் கொண்டு டெர்மினல் 1 விரிவாக்க பணிகள் முழுமையாக முடியும் முன்பே பிரதமர் மோடி அவசர அவசரமாகக் கடந்த மார்ச் மாதம் திறந்ததாகவும் இதுவே விபத்திற்குக் காரணம் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications