உளவுத்துறையில் வேலை.. வெள்ளை உடை சாமியார்.. யார் இந்த போலே பாபா?
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸில் நிகழ்ச்சி நடத்திய சாமியார் போலே பாபா என்ற நாராயண் சாகர் ஹரி உளவுத்துறையில் பணியாற்றி வந்தார். தான் பணிபுரியும் போதும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருந்ததாகவும், 1990களில் ஆன்மிகப் பாதையில் செல்வதற்காக ராஜினாமா செய்ததாகவும் அவர் தனது பக்தர்களிடம் கூறியிருக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸில் 122 பேர் உயிரிழந்த ஆன்மீக நிகழ்ச்சியினை நடத்திய சாமியார் போலே பாபா என்கிற நாராயண் சாகர் ஹரி குறித்து கூகுளில் பலர்தேடி வருகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சிக்கு என்ன காரணம் என்பது குறித்தும் தேடி வருகிறார்கள். இதுபற்றி பார்ப்போம்..

வட மாநிலங்களில் மிகவும் பிரபலமான சாமியார்களில் ஒருவர் போலே பாபா என்ற நாராயண் சாகர் ஹரி ஹத்ராஸில்நடத்திய நிகழ்ச்சி தான் இவ்வளவு பெரிய துயரத்திற்கு காரணம். போலே பாபா என்ற நாராயண் சாகர் ஹரி ஒரு காலக்கட்டத்தில் உளவுத்துறையில் பணியாற்றி வந்தார். தான் பணிபுரியும் போதும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருந்ததாகவும், 1990களில் ஆன்மிகப் பாதையில் செல்வதற்காக ராஜினாமா செய்ததாகவும் அவர் தனது பக்தர்களிடம் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள பகதூர் நகரி கிராமத்தில் போலே பாபா என்ற நாராயண் சாகர் ஹரி பிறந்தார். அங்கு தனது தொடக்க கல்வியை முடித்த நாராயண் சாகர் ஹரி, கல்லூரி படிப்பை முடித்த கையோடு உளவுத்துறையில் வேலைக்கு சேர்ந்தார். பணிபுரியத் தொடங்கிய காலகத்திலேயே அவருக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாக இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் வேலையை உதறிவிட்டு, ஆன்மீகத்தின் பக்கம் திரும்பி உள்ளாராம்.
ஒரு சாமியாக நாராயண் ஹரியின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று என்றால், அவர் காவி உடைகளை அணிய மாட்டார்.. வெள்ளை நிற ஆடைகளை விரும்புவார். வெள்ளை நிற குர்தா-பைஜாமாவில் வலம் வருவார். போலே பாபா என்ற நாராயண் சாகர் ஹரி தனது ஆன்மீக சொற்பொழிவுகளுக்காக பக்தர்களால் வழங்கப்படும் நன்கொடைகளில் இருந்து எந்தத் தொகையையும் சேமித்து வைப்பதில்லையாம். அதையெல்லாம் தனது பக்தர்களுக்காக செலவிட்டு விடுவாராம்.
கடவுளின் சீடர் என்று சொல்லும் நாராயண் ஹரிக்கு மேற்கு உத்தரபிரதேசத்தில் கணிசமான ஆதரவாளர்கள் உள்ளனர். இன்று (ஜூலை 2) ஹத்ராஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சத்சங்கத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்தனர். நிகழ்வு நடைபெற்ற இடம் மிகவும் சிறியதாக இருந்ததால், அங்கு கூடியிருந்த கூட்டத்திற்கு இடமளிக்க முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை நடத்திய, ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யோகி ஆதித்யாநாத் வெளியிட்ட ட்வீட் பதிவில், "ஹத்ராஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகள் மனவேதனையை கொடுக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் துறை ரீதியான அதிகாரிகளை உடனடியாக மீட்புப் பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளேன். போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்,” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications