அவமானப்படுத்த கூடாது! சரசரவென டெல்லிக்கு போய் மோடியை பார்த்த தமிழிசை.. என்னாச்சு? பரபர காரணம்!
டெல்லி: தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் டெல்லிக்கு சென்று இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் அம்மாநில முதல்வர் கே சந்திரசேகர ராவிற்கும் கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல் நிலவி வருகிறது. அரசு குறித்து ஆளுநர் கருத்து தெரிவிப்பது, சில மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது என்று முக்கியமான புகார்களை தமிழிசை மீது கேசிஆர் தரப்பு வைத்து வருகிறது.
இந்த நிலையில்தான் பிரதமர் மோடியை தமிழிசை அவசர அவசரமாக சென்று இன்று பார்த்து இருக்கிறார். அந்த அளவிற்கு என்ன நடந்தது? ஏன் தமிழிசை இந்த டெல்லி பயணத்தை மேற்கொண்டார் என்று பார்க்கலாம்.

என்னாச்சு
சமீபத்தில் தெலுங்கானாவில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஆளுநர் தமிழிசைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. பொதுவாக ஆளுநர் உரையுடன்தான் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். அரசுதான் இந்த பட்ஜெட் உரையை தயாரிக்கும். ஆனால் அந்த ஆளுநர் உரை கூட இல்லாமல்.. அதற்கு கூட ஆளுநரை அழைக்காமல்.. தொழில்நுட்ப பிரச்சனை என்று கூறி அவரின் உரை இல்லாமலே அங்கு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இதுதான் முதல் பெரிய மோதல்.

வரவில்லை
அதன்பின் நடந்த பல்வேறு கூட்டங்களில் தமிழிசை புறக்கணிக்கப்பட்டார். உதாரணமாக.. முழுகு மாவட்டத்தில் நடந்த சமக்கா சரலக்கா விழாவில் தமிழிசை கலந்து கொள்ள சென்றார். அவரை அழைக்க அங்கு அமைச்சர்கள் யாரும் வரவில்லை. எம்எல்ஏக்கள் வரவில்லை. ஆட்சியர் கூட வரவில்லை. ஏன் எஸ்பி கூட வரவில்லை. பாஜக எம்எல்ஏக்கள் சிலர் மட்டுமே அங்கு இருந்தனர். இது இரண்டாவது மோதல்.

கோவில் விழா
அதேபோல் அங்கு நடந்த லட்சுமி நரசிம்மா சுவாமி கோவில் விழாவிற்கு ஆளுநருக்கு அழைப்பு செல்லவில்லை. அந்த கோவில் புனரமைப்பு பணிகளுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது. இதில் முதல்வர் கலந்து கொண்டார். இரண்டு நாட்களுக்கு பின் அங்கு வழிபாடு நடத்த தமிழிசை சென்றார். ஆனால் கோவில் தர்மகத்தா அன்று திடீரென லீவ் (கோவில் திறந்து இரண்டே நாளில்) எடுத்தார். அதோடு மாவட்ட ஆட்சியர், எஸ்பி, எம்எல்ஏக்கள், அமைச்சர் யாரும் தமிழிசையை அங்கு பார்க்க கூட வரவில்லை.

மோதல் தீவிரம்
அங்கு மேலவைக்கு கவுசிக் ரெட்டி என்ற எம்எல்ஏவை ஆளும் டிஆர்எஸ் கட்சி பரிந்துரை செய்தது. இதை தமிழிசை ஏற்றுக்கொள்ளாததும் இந்த மோதலுக்கு காரணம். ஆளுநராக தமிழிசை இந்த நியமனத்தை நிராகரித்தார். இது மோதல் தீவிரம் அடைய காரணம் என்கிறார்கள். இதெல்லாம் போக சமீபத்தில் உகாதி விழாவின் போது ஆளுநர் மாளிகை கொடுத்த விருந்தில் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. .

மோடி
அழைப்பு கொடுக்கப்பட்டும் அமைச்சர்கள் எல்லோரும் ஆப்சென்ட். இப்படி நாளுக்கு நாள் மோதல் விரிவாகி இப்போது டெல்லி வரை புகார் சென்றுள்ளது. இந்த நிலையில்தான் தெலுங்கானாவில் நடக்கும் மோதல் பற்றியும், தான் நடத்தப்பட்ட விதம் பற்றியும் பிரதமர் மோடியிடம் ஆளுநர் தமிழிசை இன்று சந்தித்து புகார் அளித்தார். சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. இதையடுத்து வெளியே செய்தியாளர்களை சந்தித்தார் தமிழிசை.

என்ன சொன்னார்?
கவர்னர் அலுவலகத்தை அவமானப்படுத்த கூடாது. மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் ஒரு பெண். ஒரு நட்பான ஆளுநர். நான் எதுவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை. நடக்கவில்லை. என்னை அழைக்க கூடாது அரசு விழாக்களில் யாரும் இல்லை. என்னை மதிக்க வேண்டாம்.. நான் வகிக்கும் பதவியை மதிக்க வேண்டும் என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications