தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு மாற்றமில்லை.. மாத சம்பளதாரர்களுக்கு "அல்வா " கொடுத்த பட்ஜெட்
மாத சம்பளதாரர்கள் மிகவும் எதிர்பார்த்த முக்கியமான அறிவிப்பு எதையும் நிர்மலா சீதாராமன் வெளியிடவில்லை.
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று பல ஆண்டுகாலமாக மக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் அது தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மாத சம்பளதாரர்களுக்கு அல்வா மட்டுமே கொடுத்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
நிதியமைச்சர் புதிய அறிவிப்பு வெளியிடாததால் தற்போதைய வரி நடைமுறையே தொடர உள்ளது.
கொரோனா மூன்றாம் அலை, பணவீக்கம், ஐந்து மாநில தேர்தல் என பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாதச் சம்பளதாரர்களிடையே எழுந்தது.

தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு
கடந்த 8 ஆண்டுகளாக வருமான வரி விலக்கு உச்சவரம்பு இரண்டரை லட்சம் ரூபாயாக இருந்து வருகிறது. இதை உயர்த்த வேண்டும் என கடந்த பட்ஜெட்டிலேயே கோரிக்கை எழுந்தபோதும் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்றது.

மாத சம்பளதாரர்கள்
ஒவ்வொரு முறையும் பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என மாத சம்பளதாரர்கள் கோரிக்கை வைப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்த ஆண்டு குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது பற்றி எந்த ஒரு புதிய அறிவிப்பையும் நிர்மலா சீதாராமன் வெளியிடவில்லை.

வருமான வரிச்சட்டம்
கடந்த 2020-21ம் ஆண்டு மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துபவர்கள் புதிய வருமான வரி நடைமுறை அல்லது பழைய வருமான வரி நடைமுறை ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. வருமான வரிச்சட்டம் பிரிவு 87A-ன்படி, வரி செலுத்தவேண்டிய வருமானம் ரூ.3 லட்சம் வரை இருந்தால் 2,500 ரூபாய் தள்ளுபடி என்று இருந்ததை, ரூ.5 லட்சம் வரை இருந்தால் 12,500 ரூபாய் வரை தள்ளுபடி என்று மாற்றப்பட்டது.

புதிய வரி நடைமுறை
அதன்படி, 2.50 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை. 5 லட்சம் முதல் 7.50 லட்சம் வரை 5 சதவிகிதமும், 7.50 லட்சம் முதல் 10 லட்சம் வரை 10 சதவிகிதமும், 10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை 20 சதவிகிதமும், 12.5 லட்சம் முதல் 15 லட்சம் வரை 25 சதவிகிதமும், 15 சதவிகிதத்திற்கு மேல் 30 சதவிகிதமும் வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. புதிய வரி நடைமுறையில், விடுப்பு பயண கொடுப்பனவு, வீட்டு வாடகை கொடுப்பனவு, பணியாளர் கொடுப்பனவு, குழந்தைகள் கல்வி கொடுப்பனவு போன்றவற்றுக்கு விலக்கு பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. குறைந்த அளவில் முதலீடு செய்பவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் புதிய வரிநடைமுறை அமைந்துள்ளது.
Recommended Video

அறிவிப்பு இல்லை அல்வா மட்டுமே
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை வாசித்த நிர்மலா சீதாராமன் மாநில அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புப் பலன்களை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாகக் கொண்டு வர, மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் வரி விலக்கு வரம்பு 10% லிருந்து 14% ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். மிகவும் எதிர்பார்த்த தனி நபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு பற்றி எந்த வித அறிவிப்புமே வெளியிடவில்லை. அல்வா மட்டுமே கொடுத்து விட்டார் நிர்மலா சீதாராமன்.












Click it and Unblock the Notifications