"ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினத்தவரை முதல்வராக ஏற்பீர்களா?.." மெகபூபா முப்திக்கு பாஜக கேள்வி!
டெல்லி: கிறிஸ்தவ பெரும்பான்மை நாடாக உள்ள இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றுள்ளதாக பேசிய மெகபூபா முப்தி, மத்திய அரசை மறைமுகமாக சாடியிருந்தார். இதற்கு பதிலடிகொடுத்த பாஜக எம்.பி ரவிசங்கர் பிரசாத், சிறுபான்மை தலைவர் ஒருவரை ஜம்மு காஷ்மீர் முதல்வராக நீங்கள் (மெகபூபா முப்தி) ஏற்றுக்கொள்வீர்களா? என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் நாட்டின் பிரதமரக பதவியேற்கும் முதல் இந்து நபர் ரிஷி சுனக் ஆவார். கிறிஸ்தவ பெரும்பான்மை நாடாக உள்ள இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்று இருப்பது பேசு பொருளாகியுள்ளது.

சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் ''சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை பிரதமராக இங்கிலாந்து ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், என்.ஆர்.சி, சிஏஏ ஆகிய பிளவுபடுத்தும், பாரபட்சமான சட்டங்களால் நாம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளோம்'' என்று பேசினார். இது தொடர்பாக தனது ட்விட் பதிவிலும் மெகபூபா முப்தி பதிவிட்டு இருந்தார்.

பாஜக பதிலடி
மெகபூபா முப்தியின் இந்த ட்விட் பதிவை சுட்டிக்காட்டி அவரை கடுமையாக பாஜக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்.பியுமான ரவிசங்கர் பிரசாத் மெகபூபா முப்திக்கு கேள்வி எழுப்பியுள்ளார். ரவிசங்கர் பிரசாத் தனது ட்விட் பதிவில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளதாவது:- மெகபூபா முப்தியின் ட்விட் பதிவை பார்த்தேன். ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் குறித்து மெகபூபா முப்தி பதிவிட்டு இருக்கிறார். சிறுபான்மை தலைவர் ஒருவரை ஜம்மு காஷ்மீர் முதல்வராக நீங்கள் (மெகபூபா முப்தி) ஏற்றுக்கொள்வீர்களா? என்று பதிவிட்டுள்ளார்.

பழங்குடியின தலைவர் ஜனாதிபதியாக
மேலும் அடுத்தடுத்த ட்விட் பதிவுகளில் ரவிசங்கர் பிரசாத் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்ட பிறகு சில தலைவர்கள் பெரும்பான்மைவாதத்திற்கு எதிராக தீவிரமாக கருத்து கூற தொடங்கி இருக்கின்றனர். இந்தியாவில் அப்துல் கலாம் ஜனாதிபதியாகவும் மன்மோகன்சிங் பிரதமராக 10 ஆண்டுகள் இருந்ததையும் அவர்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். பழங்குடியின தலைவரான திரவுபதி முர்மு ஜனாதிபதியாக இருக்கிறார்.

வருத்தம் அளிப்பதாக உள்ளது
இந்திய வம்சாவளியை சேர்ந்த திறமையான ஒரு தலைவரான ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராகியிருக்கிறார். இந்த அசாத்திய வெற்றிக்காக நாம் அனைவரும் அவரை பாராட்ட வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அரசியல் நோக்கத்திற்காக இந்த வாய்ப்பை பயன்படுத்துவது வருத்தம் அளிப்பதாக உள்ளது" என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ப சிதம்பரமும் கருத்து
முன்னதாக நேற்று காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப சிதம்பரமும் இது தொடர்பாக பதிவிட்டு இருந்தார். ப.சிதம்பரம் தனது ட்விட் பதிவில், "முதலில் கமலா ஹாரிஸ், இப்போது ரிஷி சுனக். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டு மக்கள் தங்கள் நாடுகளின் பெரும்பான்மை அல்லாத குடிமக்களை அரசாங்கத்தில் உயர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். இதிலிருந்து, இந்தியாவும், பெரும்பான்மைவாதத்தை கடை பிடிக்கும் கட்சிகளும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் உள்ளது" என்று பதிவிட்டு இருந்தார். ரிஷி சுனக் பிரதமராக தேர்வானது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவுதான் தற்போது இந்த விவாததை கிளப்பி விட்டுள்ளது.












Click it and Unblock the Notifications