இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம் – ஆனால் இந்தியாவில் நிலை?
டெல்லி: இன்று உலகம் முழுவதும் உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பத்திரிக்கையாளர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக சர்வதேச ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஜனநாயகம் தழைக்க நான்கு தூண்கள் வலுவாக இருக்க வேண்டியது அவசியம் அதில் நான்காவது தூணாக ஊடகங்கள் வருகின்றன. பத்திரிக்கை சுதந்திரம் குறித்து பன்னாட்டு மன்றத்தில் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியதன் காரணமாக ஐ.நா மன்றம் 1993 -ம் ஆண்டு முதல் மே மாதம் 3-ம் தேதியை உலக பத்திரிக்கை சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறது.

பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல், பத்திரிகைகளின் சுதந்திரத்தை காப்பது, பத்திரிக்கையாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது போன்ற நோக்கங்களுக்காக இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது உலகின் வல்லரசுகள் நாங்கள்தான் என்று மார்தட்டும் எந்த நாடும் பத்திரிக்கையாளர்களை சுதந்திரமாக வாழ விடுவதில்லை. அதில் நமது நாடும் ஒன்று.
உலகம் முழுவதுமே பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள். 2006ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 155 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2018ஆம் ஆண்டில் 80 க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில்தான் 240 க்கும் அதிகமான பத்திரிக்கையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பத்திரிக்கையாளர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு குறித்து பிரான்சை நாட்டை சேர்ந்த எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு சர்வதேச அளவில் ஆய்வு ஒன்றை நடத்தியது. பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடத்திய ஆய்வில் இந்தியாவுக்கு 140 வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் பெண் பத்திரிக்கையாளர்கள் மீது பாலியல் அத்துமீறல்கள் அதிகமாகியுள்ளன.
நம்மூர் நடிகர் எஸ் வி சேகர் கூட பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து மோசமாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. காஸ்மீர் மாநிலத்தில் பத்திரிக்கையாளர்கள் பணி மிக மோசமாகவும், அபாயகரமானதாகவும் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 6 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மக்களவை தேர்தல் நடைபெறும் இந்த கால கட்டத்தில் இந்துத்துவா ஆதரவாளர்களால் பத்திரிக்கையாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பிராந்திய மொழி பத்திரிக்கையாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications