மிகவும் மோசமான நிலையில், பிரேசில்.. உருமாறிய கொரோனால் அதிகரிக்கும் உயிரிழப்பு.. தப்புமா உலக நாடுகள்?
டெல்லி: தினசரி கொரோனா பாதிப்பு உலகளவில் அமெரிக்காவைவிடப் பிரேசில் நாட்டில் மிகவும் மோசமடைந்துள்ளது, அங்கு ஒரே நாளில் மட்டும் 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் 4,84,799 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் அதிகபட்சமாக 84,047 பேருக்கும் அமெரிக்காவில் 63,831 பேருக்கும் பிரான்ஸ் நாட்டில் 25,229 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இதுவரை உலகெங்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,95,93,594 ஆக உயர்ந்துள்ளது. உலகெங்கும் அமெரிக்க, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கொரோனாவால் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேசிலில் 2,152 பேரும் அமெரிக்காவில் 1,334 பேரும் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை உலகளவில் மொத்தம் 26,50,725 பேர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளில் கொரோனா உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன.
உலகெங்கும் தற்போது 2,06,99,114 பேர் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பாதிப்பு மோசமாக உள்ள 10 நாடுகளில் 6 நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. பிரிட்டன் உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாகப் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.