கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே இல்லை.. டாக்குமெண்டுகளை பகிர்ந்த கனிமொழி எம்பி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில் தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் மொழியை கற்றுத் தர எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள் எனக் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குத் தமிழ் மொழியைக் கற்றுத்தர ஆசிரியர்கள் யாரும் இல்லை என மத்திய அரசு பதிலளித்துள்ளதாகக் கனிமொழி தனது ட்விட்ரில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் மும்மொழி கொள்கை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு குறித்த கடுமையான விவாதங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக மொழி கொள்கை விவகாரம் குறித்து திமுகவினர் தொடர்ச்சியாகக் கேள்விகளை எழுப்பி அவைகளை முடக்கி வருகிறார்கள்.

Zero tamil teachers are in kendriya vidyalaya in tamil nadu says DMK Kanimozhi MP

கனிமொழி

இதற்கிடையே மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக லோக்சபா எம்பி கனிமொழி நாடாளுமன்றத்தில் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எத்தனை தமிழ், இந்தி, சமஸ்கிருதம் மொழிப் பாடங்களின் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பது குறித்தும் கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கிடையே தமிழ் மொழிப் பாடத்தைக் கற்பிக்கத் தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயாவில் நிரந்தர ஆசிரியர்கள் யாரும் இல்லை என்று மத்திய அரசு பதிலளித்துள்ளதாகக் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஆசிரியர்கள் பூஜ்ஜியம்

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ள பதில் "0". ஆனால், இந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதம் கற்பிக்க 65 ஆசிரியர்களும் இருப்பதாகக் கூறுகிறது மத்திய பாஜக அரசு.

அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ அல்லது சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா? அல்லது பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது அதுதானா? கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வழியாக எந்த தாய்மொழியைக் காக்கிறீர்கள் அல்லது கற்றுக்கொடுக்கிறீர்கள்? மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இப்படி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதைத்தான் காலம் காலமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

கனிமொழி கேள்வி

மேலும், நாடாளுமன்றத்தில் அவர் எழுப்பிய கேள்வி மற்றும் அதற்கு மத்திய அமைச்சர் அளித்த பதில் விவரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். அதன்படி நாட்டில் எத்தனை மாணவர்கள் மூன்றாவது மொழியைப் படிக்கிறார்கள் எந்த மொழிகள் பயிற்றுவிக்கப்படுகிறது எனக் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எத்தனை பள்ளிகளில் மூன்றாவது மொழி பயிற்றுவிக்கப்படுகிறது என்றும் இந்தி மாணவர்கள் எத்தனை பேர் பிற இந்திய மொழிகளை கற்கிறார்கள் என்பது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.

மத்திய அமைச்சர் பதில்

இத்தோடு சேர்த்துத் தான் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார். கனிமொழி எம்பி இந்த கேள்விகளை எழுத்துப்பூர்வமாகக் கேட்டிருந்த நிலையில், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி இதற்கு எழுத்துப்பூர்வமாக விரிவான பதிலை அளித்திருந்தார்.

அதில் அவர், "அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு மும்மொழிக் கொள்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாணவர்கள் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் வேறு ஒரு இந்திய மொழியைக் கற்க வாய்ப்பு கிடைக்கும். நாடு முழுக்க 2.10 கோடி மாணவர்கள் ஒரு மொழி கற்பிக்கும் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். அதேபோல 4.16 கோடி மாணவர்கள் இரு மொழிப் பாடங்களைப் பயிற்றுவிக்கும் பள்ளிகளிலும் 18.53 கோடி மாணவர்கள் 3 மொழிகளைக் கற்பிக்கும் பள்ளிகளிலும் பயின்று வருகிறார்கள்.

ஒப்பந்த அடிப்படையிலேயே ஊழியர்கள்

தமிழகத்தைப் பொறுத்தவரை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 86 இந்தி மற்றும் 65 சமஸ்கிருத ஆசிரியர்கள் உள்ளனர். அதேநேரம் தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்கள்தான் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 24 மாணவர்கள் தமிழை மொழிப் பாடமாகத் தேர்வு செய்துள்ளனர்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+