தண்ணீ..தண்ணி..ரெண்டு பிரச்சினையும் தீர்த்துடுவோம்..! தாயாருக்காக தருமபுரியில் தயாராக சங்கமித்ரா.!
தருமபுரி: நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் தர்மபுரியில் தாயாருக்காக அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா அன்புமணி வித்யாசமாக மேற்கொண்டு வரும் பிரச்சாரம் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்திருப்பதாக கூறுகின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தான் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பாஜகவுடன் கரம் கோர்த்து தேர்தலை சந்திக்கிறது.

பாஜக கூட்டணியில் பத்து தொகுதிகளை கேட்டு பெற்றிருக்கும் நிலையில் கட்சியின் தெரிந்த முகங்கள் பலரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
பாமக போட்டி: கட்சியின் பொருளாளர் திலகபாமா, வழக்கறிஞர் பாலு, இயக்குனர் தங்கர் பச்சான் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். தர்மபுரி தொகுதியில் முதலில் வேட்பாளராக அரசாங்கம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும் பசுமை தாயகத்தின் தலைவருமான சௌமியா அன்புமணி களமிறக்கப்பட்டார். இது தமிழக அரசியல் மட்டுமல்ல அது பாட்டாளி மக்கள் கட்சியினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சௌமியா அன்புமணி: கட்சியில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாத சௌமியா அன்புமணி சுற்றுச்சூழல் நீர் மேலாண்மை விவசாயம் புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பணிகளிலேயே கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் அவர் வேட்பாளராக இறக்கப்பட்டது சற்றே பரபரப்பை ஏற்படுத்தினாலும், வெற்றி வாய்ப்பு இதன்மூலம் அதிகரித்துள்ளதாகக் நம்பப்பட்டது. தற்போது தர்மபுரியில் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் சௌமியா அன்புமணி. மேலும் அவருக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினரே களத்தில் இறங்கி இருக்கின்றனர்.
சங்கமித்ரா அன்புமணி: பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளோடு கணவரும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ், கூட்டணி கட்சித் தலைவர்கள் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த கவனிக்க வேண்டியவர் அன்புமணி சௌமியா தம்பதியினரின் மகளான சங்கமித்ரா அன்புமணி தான்.. பல இடங்களில் சாதாரணமாக சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பது , பெண்களிடம் சிரித்துப் பேசி வாக்கு கேட்பது, டீ குடிப்பது, மக்கள் பிரச்சனைகளை கேட்டு தெரிந்து கொள்வது என அரசியலில் ஏற்கனவே நன்கு பரிச்சயமானவர் போலவே அவரது பிரச்சார பாணி இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியினர் கூறி வருகின்றனர்.
2 தண்ணீர் பிரச்சினை: அது மட்டுமல்லாமல் செல்லும் இடங்களிலெல்லாம் பெண்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை எடுத்து கூறி வருகிறார். குறிப்பாக தர்மபுரியில் பிரச்சனை என்றாலே தண்ணீர் பிரச்சனை தான்.. இரண்டு தண்ணீர் பிரச்சினை உள்ளது.. ஒன்று குடிக்கும் தண்ணீர் பிரச்சனை வேட்பாளர் சௌமியா அன்புமணியை வெற்றி பெற வைத்தால் குடிதண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும் மேலும் பெண்களுக்கு மற்றொரு பிரச்சனை டாஸ்மாக் தண்ணி பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களித்தால் டாஸ்மாக் கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என இரண்டு தண்ணீர் பிரச்சனைகளை வைத்தும் அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருவது பெண்களை கவர்ந்துள்ளது.. அன்புமணி ராமதாஸ் சௌமியா அன்புமணி வரிசையில் தற்போது சங்கமித்ரா அன்புமணியும் அரசியலுக்கு தயாராகி வருவதாகவும் அதன் முன்னோட்டமாகவே தற்போது அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என பேசிக் கொள்கின்றனர் தர்மபுரி பாட்டாளி மக்கள் கட்சியினர்.












Click it and Unblock the Notifications