புது வெள்ளம் பாயுது! ஒகேனக்கலுக்கு ஓடி வரும் காவிரி நீர்.. பரிசல் சவாரி நிறுத்தம்
தருமபுரி: கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. எனவே ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 32,000 கன அடி இருந்த நிலையில் தற்போது நீர் வரத்து 43,000 கன அடியாக அதிகரித்திருக்கிறது. நீர்வரத்து அதிகரித்திருப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பட்டிருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தின் தலக்காவிரி எனும் பகுதியில் காவிரி நதி தொடங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தொடங்கும் காவிரி, அங்கிருந்து அருவிகளாகவும், காட்டாறாகவும் பாய்ந்து கேஆர்எஸ் அணைக்கு வந்து சேர்கிறது. அங்கு குடிநீர், வேளாண் மற்றும் மின்சார உற்பத்தியை பூர்த்தி செய்து பின்னர், அங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது. 320 கி.மீ தூரத்திற்கு பயணித்த காவிரி, பின்னர் 64 கி.மீ நீளத்திற்கு கர்நாடகா, தமிழ்நாட்டின் எல்லையாக பாய்கிறது.
அங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக உள்ளே நுழைகிறது. பாறைகள் வழியாக தடைகளை தகர்த்து நீர் பாயும்போது தமிழ்நாட்டிற்குள் நுழைய அத்தனை அவசரமா? என்று கேட்க தோன்றும்.
அங்கிருந்து கொஞ்சம் சாந்தமாகி, சேலம் மாவட்டம் மேட்டூருக்கு சென்று அங்கு அணையில் கொஞ்சம் ஆசுவாசம் கொள்கிறது. அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் வேளாண் பாசனத்திற்காக இந்நீர் திறந்துவிடப்படுகிறது.
- சேலம்
- ஈரோடு
- நாமக்கல்
- கரூர்
- திருச்சி
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- நாகப்பட்டினம்
- மயிலாடுதுறை
- அரியலூர்
- கடலூர்
என 11 மாவட்டங்களில் காவிரி நதி பாய்கிறது. இதில் திருச்சிக்கு வந்து இரண்டு பிரிவாக இந்த நதி பிரிகிறது. ஒன்று கொள்ளிடமாகவும், இன்னொன்று காவிரியாகவும் பிரிகிறது. கொள்ளிடம் ஆறு அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்கள் வழியாக பாய்கிறது. காவிரி ஆறு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு பாய்கிறது.
தற்போது ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications