திண்டுக்கல் சிறுமலையில் இருந்து வந்த கார்.. உள்ளே இருந்த பொக்கிஷம்.. மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் இருந்து யானை தந்தத்தை சிலர் காரில் கடத்தி வருவதாக தமிழ்நாடு வன உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நத்தம் சாலையில் உள்ள சிறுமலை பிரிவு அருகே சோதனை செய்தனர். அந்த காரின் பின்புற இருக்கையில் உடைந்த நிலையில் யானை தந்தம் இருந்தது. அதை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த விவாகரத்தில் ஏழு பேரை கைது செய்தனர்.
விலங்கு இனங்களில் மிகப்பெரிய உயிரினமான யானை இருந்தால் அங்கு மிகப்பெரிய காடே உருவாகிவிடும். காடுகளை உருவாக்குவதில் யானைகள் தான் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. காடுகள் உருவாவதன் காரணமாக அங்குள்ள உயிரினங்கள் வாழ்வதற்கு யானைகள் தெரியாமலேயே உதவுகின்றன. யானைகளை பொறுத்தவரை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று போற்றப்படுகிறது. யானைக்கு உள்ள தந்தங்கள் விலை மதிக்க முடியாதவை ஆகும்.யானை தந்தத்தை கோடிகள் கொடுத்து வாங்கி வைத்துக் கொள்ள பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் விரும்புகிறார்கள். யானை தந்தங்கள் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் கலாச்சாரத்தின் அடையாளமாக இருக்கிறது.

யானை தந்தங்கள் மிக குறைவாக வருவதால் அதனை எவ்வளவு கோடி கொடுத்தும் வாங்க உலக நாடுகளில் பலர் தயாராக இருக்கிறார்கள்.. தங்கத்தை விடவும் விலை மதிக்க முடியாதவையாக யானை தந்தங்கள் இருந்து வருகிறார்கள். இன்று பல பணக்காரர்கள் தங்கள் வீடுகளில் என்ன விலை கொடுத்தாவது வாங்கி வைத்து வருகிறார்கள்.
இதன் காரணமாக உலகம் முழுவதும் யானைகள் வேட்டையாடப்படுவது தொடர்கிறது. இந்தியாவிலும் அவ்வப்போது யானைகள் வேட்டையாடப்படுவது நடக்கிறது. யானைகள் வேட்டையாடப்படுவது மட்டுமின்றி, அதன் தந்தங்களை விற்பதும், வாங்குவதும் இந்தியாவில் பெரிய குற்றம் ஆகும். அப்படி செய்தால் வனத்துறை சட்டப்படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
இந்நிலையில் திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை பகுதியில் இருந்து யானை தந்தத்தை சிலர் காரில் கடத்தி வருவதாக தமிழ்நாடு வன உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள், திண்டுக்கல்லில், நத்தம் சாலையில் உள்ள சிறுமலை பிரிவு அருகே நேற்று தீவிர வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது சிறுமலையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதித்த போது, காரின் பின்பக்க இருக்கையில் உடைந்த நிலையில் யானை தந்தம் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து யானை தந்தம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், காரில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் சிறுமலையை அடுத்த பழையூரை சேர்ந்த பெருமாள் (வயது 34), ஜெயக்குமார் (47), வெங்கடேஷ் (46) என்பதும், காரில் யானை தந்தத்தை கடத்தியது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் அருகே உள்ள சிலுவத்தூரை சேர்ந்த பிரபு (33) என்பவர் மூலம் நத்தத்தை சேர்ந்த சேகர் (55), மதுரை மேலூரை சேர்ந்த ஜோசி (51), கோபால்பட்டியை சேர்ந்த ரெங்கராஜ் (51) ஆகியோருக்கு அந்த யானை தந்தத்தை விற்பனை செய்வதற்காக திண்டுக்கல்லுக்கு வந்ததும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த 4 பேரையும் வன உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகள் பிடித்தனர். அதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கார், யானை தந்தம் மற்றும் பிடிபட்ட 7 பேரையும், சிறுமலை வனச்சரகர் மதிவாணன் தலைமையில் வனத்துறை அதிகாரிகள், சிறுமலை வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றனர். பின்னர் யானை தந்தத்தை எங்கிருந்து கடத்தி வந்தனர். அதை யாரிடம் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றார்கள் என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தத்தின் மதிப்பு பல லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications