மேயர் உங்களுக்கு..துணை மேயர் எங்களுக்கு.. களமிறங்கிய ஐ.பெரியசாமி..கண்டுகொள்ளாத திண்டுக்கல் சீனிவாசன்
மேயர் உங்களுக்கு..துணை மேயர் எங்களுக்கு.. களமிறங்கிய ஐ.பெரியசாமி..கண்டுகொள்ளாத திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் அதிமுகவின் மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தரப்பினரும். முன்னாள் மேயர் வி.மருதராஜ் தரப்பினரும் இணைந்து ஆலோசித்து முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு மிகக் குறுகிய இடைவெளியில் உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் 47ல் அதிமுக போட்டியிடுகிறது. ஒரு வார்டு கூட்டணிக் கட்சியான தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 38 வார்டுகளில் திமுக அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. 9 வார்டுகளில் திமுக கூட்டணிக் கட்சிகளை அதிமுக எதிர்கொள்கிறது.

அதிமுகவுக்குள் மோதல்
அதிமுகவில் மேயர், துணை மேயர் வேட்பாளர் யார் என்பதில் கட்சியினரிடையே வேறுபாடு இருந்து வந்தது. முன்னாள் மேயர் மருதராஜின் மகளும் 11வது வார்டு வேட்பாளருமான பொன்முத்து தான் மேயர் வேட்பாளர் என வி.மருதராஜ் தரப்பினர் தெரிவித்த நிலையில், தேர்தல் முடிந்த பின்பே மேயர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தரப்பினர் தெரிவித்து வந்தனர். இது திண்டுக்கல் அதிமுகவில் ஒற்றுமை இல்லாத நிலையை வெளிப்படுத்தியது. இதையடுத்து கட்சியினரிடையே இந்த பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.

அமைதி பேச்சுவார்த்தை
அதன்படி கடந்த நில நாட்களுக்கு முன்பு இரவு திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் திண்டுக்கல் A.சீனிவாசன். மருதராஜ் மற்றும் நிர்வாகிகள், 47 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். நீண்ட விவாதத்துக்குப் பின்பு மேயர் வேட்பாளராக வி.மருதராஜின் மகள் பொன்முத்துவையும், துணை மேயர் வேட்பாளராக திண்டுக்கல் சி.சீனிவாசனின் மகன் ராஜ்மோகனையும் முன்னிறுத்துவது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அறிமுக வேட்பாளர்களுடன் இணைந்து முன்னாள் அமைச்சர், முன்னாள் மேயர் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டதாகவும் மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

தயாரான திமுக
அதே நேரத்தில் திமுக சார்பில் மேயர் வேட்பாளர் யார் என இதுவரை தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தெரியாத அளவுக்கு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் ஐ.பெரியசாமியின் ஆசி பெற்ற வேட்பாளராக கருதப்படும் இந்திராணி என்பவரை மேயர் வேட்பாளராக நிறுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக மூத்த உடன் பிறப்புகள் கூறி வருகின்றனர். தற்போது மேயர் போலவே இந்திராணி வாக்கு சேகரித்து வருவதாகவும் நிச்சயம் அவர் வெற்றி பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார் என திமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். துணை மேயர் பதவிக்குத்தான் அங்கு கடும் போட்டி நிலவி வருகிறது. பல முன்னாள் நிர்வாகிகளும் தற்போதைய புதுமுகங்களும் துணை மேயர் கனவில் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

தலைகாட்டாத சீனிவாசன்
இது ஒருபுறம் இருந்தாலும் பிரச்சாரம் உள்ளிட்டவற்றில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆர்வம் காட்டவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தற்போதைய அமைச்சரான ஐ பெரியசாமி வேட்பாளருக்கு ஆதரவாக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டங்களில் மட்டும் தலைகாட்டிய முன்னாள் அமைச்சர் சீனிவாசன் அதன்பிறகு தனிப்பட்ட முறையில், ஏன் தனது மகனுக்கு கூட பிரச்சாரம் செய்ய இதுவரை வரவில்லை என அதிமுக தொண்டர்கள் புலம்பி வருகின்றனர். தேர்தலுக்கு காலக்கெடு குறைவாக உள்ள நிலையில், என்ன முடிவெடுக்கப் போகிறார் அவர் எனவும் கூறுகின்றனர் மூத்த நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications