நடுகாட்டில் கண்ணீருடன் பசு.. பரிவுடன் கன்று ஈன உதவிய பட்டதாரி பெண்.. அந்த மனசுதான் சார் கடவுள்..!
திண்டுக்கல் : நடுக்காட்டில் ஆளில்லாத இடத்தில் பசுமாடு கன்று ஈனும் போது, எம்பிஏ பட்டதாரி பெண் உதவிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், பலரும் அப்பெண்ணை பாராட்டி வருகின்றனர்.
சமூக வலைதளங்கள் அதிகமாகி விட்ட இந்தக் காலத்தில் தங்களை சுற்றியுள்ளவர்களை மறக்கும் அளவுக்கு அவற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. எந்த நேரமும் செல்போனில் மூழ்கி இருக்கும் மக்கள் தற்போது அதிகமாகி விட்டனர்.
ஒருபுறம் செல்போன்களால் நேரம் வீணாவது மக்களுடனான தொடர்பு அற்றுப்போவது என புகார்கள் ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் ஏராளமான நல்ல விஷயங்கள் மக்களை சென்றடைய சமூகவலைதளங்கள் உதவுகிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி ஏராளமானோரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது

பட்டதாரி பெண்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளையகவுண்டன் ஊரைச் சேர்ந்த தண்டபாணி சண்முகவள்ளி தம்பதிகளின் இருபத்தி மூன்று வயது மகள் சுதர்சனா. எம்பிஏ பட்டதாரியான இவர் தனியார் வங்கியில் துணை மேலாளராக பணி கிடைத்துள்ளது.

பசு மாடு
வேலைக்குச் செல்ல இன்னும் நாட்கள் உள்ள நிலையில் தனது வீட்டில் உள்ளார் சுதர்சனா. விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அவரது வீட்டில் ஆடு கோழி போன்ற பல ஜீவன்களை அவரது பெற்றோர் வளர்த்து வருகின்றனர். வீட்டில் இருக்கும் பசுமாட்டின் மீது மிகுந்த பாசம் கொண்ட அவர் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பசுமாட்டை பிடித்துச் சென்று மேய்ச்சலுக்கு விடுவது சுதர்சனவின் வழக்கம்.

கன்று ஈன்ற பசு
இந்நிலையில் வழக்கம் போல் இன்றைய தினம் காட்டுப் பகுதிக்கு பசுமாட்டை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார் சுதர்சனா. நிறைமாத கர்ப்பமாக இருந்த அவரது பசு மேய்ந்து கொண்டிருந்த பொழுது திடீரென கன்று போட தொடங்கியது.

பெண்ணுக்கு பாராட்டு
இதனை அறிந்த சுதர்சனா தனது தாய் தந்தையருக்கு தகவல் தெரிவித்துவிட்டு காத்திருக்காமல் பசுமாட்டிற்கு தானே பிரசவம் பார்த்தார். பட்டதாரிப் பெண் பயமில்லாமல் துணிச்சலாக பசு மாட்டிற்கு பிரசவம் பார்த்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், பலரும் அப்பெண்ணை பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications