கொடைக்கானலுக்கு இந்த வாகனங்களில் போகாதீங்க.. அமலுக்கு வந்த புது ரூல்ஸ்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்குச் செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள பயணிகள் மற்றும் சரங்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மலைகளின் அரசியாக உள்ள ஊட்டிக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் விரும்பும் இடம் கொடைக்கானல் தான். அதனால், மலைகளின் இளவரசி என்று கொடைக்கானல் அழைக்கப்பட்டு வருகிறது. மலைப் பயிர்கள், தேயிலைத் தோட்டம் என கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப் போர்வை போர்த்தியது போன்றும், குளுகுளு காலநிலையும் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு பிடித்த இடமாக கொடைக்கானல் உள்ளது.

சர்வதேச சுற்றுலா தளமாக விளங்கும் கொடைக்கானலில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இதனால், சில நேரங்களில் போக்குவரத்தே ஸ்தம்பித்து விடுகிறது. கொடைக்கானல் நகர்ப் பகுதி மற்றும் மலைப் பகுதிகளில் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் பல மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் உள்ளது.
கொடைக்கானலில் போக்குவரத்து பிரச்னை பிரதான பிரச்னையாக உள்ளதால் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இதைத்தொடர்ந்து, கொடைக்கானலின் நுழைவுப் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சோதனைச் சாவடி அருகே வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இ-பாஸ் வைத்திருக்கும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கொடைக்கானலில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகன சோதனையின் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மாநில போக்குவரத்து அதிகாரி அறிவுறுத்தலின் பேரில், பொதுநலன் கருதியும், பாதுகாப்புக்காகவும் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள பயணிகள், சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலுக்கு செல்லும் மலைப் பாதைகளின் தொடக்கத்திலேயே இந்த வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 12 மீட்டர் நீளத்திற்கு மேல் உள்ள வாகனங்கள் மலைச் சாலைகளில் திரும்புவதற்கு மிகவும் சிரமம் ஏற்படும். இதனால், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதால் விபத்துகளைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொடைக்கானல் பகுதியில் ஏற்கனவே நிலவி வரும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, 12 மீட்டருக்கு மேல் உள்ள நீள வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்காணிக்கும் வகையில் வத்தலகுண்டு, பழனி மலை அடிவாரப் பகுதிகளிலேயே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
செக் போஸ்டில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சோதனை செய்த பின்னரே ஆம்னி பேருந்துகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையால் கொடைக்கானல் மலைப் பாதைகளில் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications