சிறுநரிகள், செருக்கர் கூட்டம், கழகம் மீட்போம்- கருணாநிதி நினைவு நாளில் அழகிரி அணி ட்விஸ்ட் போஸ்டர்
திண்டுக்கல்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2-வது நினைவேந்தலை முன்னிட்டு மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர் அதகளப்படுத்தி கொண்டிருக்கிறது.
கருணாநிதி காலத்திலேயே திமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் மு.க. அழகிரி. கருணாநிதி மறைவுக்குப் பின்னர் திமுகவில் மீண்டும் இணைய முயற்சித்தார்..முயற்சித்து கொண்டே இருக்கிறார்.

அழகிரி ஆதரவாளர்கள் நம்பிக்கை
திமுக தலைமையுடன் மு.க. அழகிரி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.. நடத்திக் கொண்டே இருக்கிறார் என்பது அவரது ஆதரவாளர்களின் நம்பிக்கை. அதேநேரத்தில் பாஜகவுக்கு போவார் அல்லது ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளராவார் என்கிற அசராத நம்பிக்கையும் அழகிரி ஆதரவாளர்களுக்கு இருக்கிறது.

அஞ்சா நெஞ்சன் அழகிரி பேரவை
அஞ்சா நெஞ்சன் அழகிரி பேரவை சார்பில் தென்மாவட்டங்களில் திமுக தலைமை மீது அதிருப்தி அடைந்த முன்னாள் நிர்வாகிகள் திரண்டனர். இன்னமும் அவர்கள் வேறு கட்சிக்குப் போகாமல் அழகிரியின் அடுத்த நகர்வுக்காக ஆண்டுகள் கணக்கில் தவமாய் தவமிருப்பதைப் போல காத்திருக்கின்றனர்.

விடாது போஸ்டர் யுத்தம்
கருணாநிதியின் பிறந்த நாள், அழகிரியின் பிறந்த நாள், கருணாநிதியின் நினைவுநாட்களில் அழகிரி ஆதரவாளர்கள் அடித்து ஒட்டும் போஸ்டர்கள் திமுகவில் திகுதிகுவை கிளப்பிக் கொண்டுதான் இருக்கிறது. இம்முறை கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவுநாளிலும் அழகிரியின் ஆதரவாளர்கள் அதே அதகளத்தை அரங்கேற்றி உள்ளனர்.

கருணாநிதி 2-ம் ஆண்டு நினைவு நாள்
திண்டுக்கல் அழகிரி ஆதரவாளர்கள் தங்களது போஸ்டரில், சிறுநரிகள் ஊளையிடுவதால் சேதாரம் இல்லை! செருக்கர் கூட்டம் சேர்ந்திருப்பதால் அச்சம் இல்லை! அஞ்சா நெஞ்சரின் படைவீரர் காண்! நெஞ்சம் நிறை கழகம் மீட்போம்! புதிய விடியல் படைப்போம்! தமிழினத் தலைவரே! நின்வழியில் என்றும் நடப்போம் என்று சீண்டியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications