திருப்பதி லட்டுக்கு நெய் சப்ளை செய்ததில் கலப்படம் உறுதி.. திண்டுக்கல் நிறுவனத்துக்கு FSSAI நோட்டீஸ்!
திண்டுக்கல்: திருப்பதி லட்டு சர்ச்சையில் சிக்கிய ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்திற்கு FSSAI நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளை செய்த AR டெய்ரி நிறுவனத்தின் 4 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தியதில் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து விளக்கம் கேட்டு அந்நிறுவனத்திற்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு கலந்திருந்தது ஆய்வக பரிசோதனையில் தெரியவந்தது. திருப்பதி லட்டுக்கு நெய் வழங்கிய 5 நிறுவனங்களில் ஒரு நிறுவனமான திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் என்ற பால் நிறுவனம், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக நெய் அனுப்பி வந்துள்ளது.

நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையையும் தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டது. அதில் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் மூலம் திருப்பதிக்கு அனுப்பிய நெய்யில் 20 சதவீதம் மட்டுமே தரம் இருக்கிறது. அதில் சோயா பீன்ஸில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருப்பதிக்கு நெய் அனுப்பிய ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம், "எங்கள் தயாரிப்பில் எந்த குறைபாடும் இல்லை. எந்தப் பரிசோதனைக்கும் நாங்கள் தயார்" என்று விளக்கம் அளித்தது. இதற்கிடையே, திண்டுக்கல் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் செப்.20 ஆம் தேதி அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினர். தொடர்ந்து அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை மாதிரி எடுத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவி தலைமையிலான அதிகாரிகள் செப்.21 ஆம் தேதி காலை அந்த நிறுவனத்துக்கு வந்தனர். பின்னர், அந்த நிறுவனத்தில் உள்ள நெய் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் இடங்களை பார்வையிட்டு சோதனை நடத்தினர். குறிப்பாக பாலில் இருந்து எவ்வாறு நெய் பிரித்து எடுக்கப்படுகிறது. அதனுடன் வேறு பொருட்கள் எதுவும் கலக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர்.
மேலும், அங்கு தயாரிக்கப்பட்ட நெய் மற்றும் பால் பொருட்களின் மாதிரிகளையும் சேகரித்தனர். பால் உள்ளிட்ட பொருட்களின் மாதிரிகளை பகுப்பாய்வுக்காக எடுத்தனர். ஏழு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. இந்நிலையில், ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்துக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளை செய்த AR Dairy நிறுவனத்தின் 4 மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியதில் அனைத்தும் தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. கலப்படம் உறுதியானதைத் தொடர்ந்து, விளக்கம் கேட்டு அந்நிறுவனத்திற்கு FSSAI நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications