நெருங்கும் தீபாவளி பண்டிகை.. காசை ‘கறி’யாக்கும் மக்கள்! அம்மாடியோவ்.. ஒரு கோடிக்கு விற்பனையான ஆடுகள்
திண்டுக்கல்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வீட்டு உபயோக பொருட்கள், பட்டாசுகள், புத்தாடைகள், இனிப்புகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையானதால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தீபாவளி பண்டிகை என்றாலே கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பது ஒரு சுகம் என்றால், அன்றைய தினம் அசைவம் சமைத்து குடும்பத்தினரோடு சாப்பிடுவதும் உறவினர்களுக்கு பகிர்ந்து அளிப்பதும் ஒரு தனி சந்தோசம் தான்..

தீபாவளிக்கு எப்படி மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று புத்தாடைகள், பட்டாசுகள், வீட்டு உபயோக பொருட்கள் என வாங்குவார்களோ, அதே அளவுக்கான முக்கியத்துவத்தை அசைவ உணவுகளுக்கும் வழங்குவார்கள்.
தற்போது தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாகவே காட்சியளிக்கிறது. சென்னை, கோவை, மதுரை, தேனி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும், திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், கன்னியாகுமரி என சிறு நகரங்களிலும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமே அதிகரித்திருக்கிறது. காலையில் தொடங்கி இரவு 12 மணி வரை கூட தீபாவளி விற்பனை இருப்பதாக கூறுகின்றனர் வியாபாரிகள்.
ஆண்டு முழுவதும் உழைத்தாலும் பண்டிகை ஒரு நாள் தானே வருகிறது என தங்கள் உழைப்பை கொட்டி குடும்பத்தினருக்கு வேண்டியதை செய்து வருகின்றனர் குடும்பத் தலைவர்களும் தலைவிகளும். இது ஒரு புறம் இருக்க, தீபாவளி பண்டிகை என்றாலே அசைவம் தான். முட்டை தொடங்கி கோழி, ஆடு, மீன், காடை என அவரவர் வசதிக்கேற்ப அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவதை அதிகம் விரும்புகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆட்டுச் சந்தைகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக புகழ்பெற்ற உளுந்தூர்பேட்டை, ஒட்டன்சத்திரம், அய்யலூர் ஆட்டுச் சந்தைகளில் அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு காத்திருக்கின்றன. அந்த வகையில் திண்டுக்கல் அருகே நாகல் நகர் பகுதியில் இன்று திங்கட்கிழமையை ஒட்டி வாராந்திர ஆட்டு சந்தை நடைபெற்றது. வழக்கமாக இந்த சந்தையில் மாலை நேரங்களில் காய்கறிகளும் காலை நேரங்களில் ஆடு விற்பனையும் செய்யப்படுவது வழக்கம். தற்போது தீபாவளி பண்டிகை என்பதால் முதல் சந்தை என்பதாலும் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் வளர்த்து வந்த ஆடு, கோழி உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
மேலும் ஆடுகளை வாங்கி விற்பனை செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் நகரில் குவிந்தனர். இதனால் வழக்கத்தை விட நாகல் நகர் ஆட்டு சந்தை களைகட்டி காணப்பட்டது. தொடர்ந்து எடையை பொறுத்து ஒரு ஆடு 3000 ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. நூற்றுக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் திண்டுக்கல் தேனி மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் இறைச்சி தேவைக்காக அவற்றை வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் அதிகாலை தொடங்கி தற்போது வரை சுமார் ஒரு கோடிக்கும் மேலாக ஆடுகள் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 10 லட்சத்திற்கு மேல் நாட்டுக் கோழிகள் விற்பனையாகி உள்ளதாக கூறுகின்றனர் வியாபாரிகள். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் ஆடுகளின் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். இதனால் கோழி, ஆடுகளை கிராமப்புறங்களில் வளர்த்து வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications