ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்த பலி.. பணத்தை இழந்த ஒட்டன்சத்திரம் இளைஞர் தற்கொலை!
திண்டுக்கல்: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50,000 ஐ இழந்த திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த இளைஞர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சோக நிகழ்வு நடந்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடிவாளம் போட தமிழக அரசு பல்வேறு கட்ட முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

ஒட்டன்சத்திரம் இளைஞர்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கூத்தம்பூண்டி கிராமம் கருமாங்கிணறை சேர்ந்தவர் அருண்குமார். பி.காம் முடித்துள்ள இவர் வேலைக்கு முயற்சித்த நிலையில் வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரங்களை பார்த்த அருண்குமார், அதன் மூலம் பணம் ஈட்டலாம் என்ற ஆசையில் அதை விளையாடத் தொடங்கியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக ரூ.50,000 வரை அருண் குமார் பணத்தை பறிகொடுத்ததால் அவரது தாய் மற்றும் உறவினர்கள் திட்டியுள்ளனர்.

மனம் உடைந்து
இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அருண்குமார் சில நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து தலைமறைவாகி உள்ளார். உறவினர்கள், நண்பர்கள் என பலரது வீடுகளில் தேடியும் அவர் காணவில்லை. இதையடுத்து அருண் குமார் காணாமல் போனது குறித்து அவரது தாயார் விஜயலட்சுமி கள்ளிமந்தையம் போலீஸில் புகார் அளித்திருக்கிறார். அவர்களும் வழக்குப்பதிவு செய்து இளைஞர் அருண்குமாரை தேடி வந்திருக்கின்றனர்.

கிணற்றில் குதித்து
இதனிடையே கருமாங்கிணறு ஊர் பொதுமக்கள் பயன்படுத்தும் கிணற்றில் இளைஞர் ஒருவர் உடல் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்று பார்த்ததில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை பறிகொடுத்துவிட்டு வீட்டிலிருந்து மாயமான அருண்குமார் தான் அது என அடையாளம் காணப்பட்டது. போலீஸார் அருண்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பி.காம் பட்டதாரி
ஆன்லைன் சூதாட்டத்தால் பி.காம் பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு ஒட்டன்சத்திரம் பகுதியில் பேசு பொருளாக அமைந்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழகத்தில் நாளுக்கு நாள் உயிர்பலி அதிகரித்து வருவது கவலைக்குரியதாகும். ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை கோரிய மசோதா மீது ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த முடிவும் எடுக்காதது இங்கு கவனிக்கத்தக்கது. இதனிடையே பாமக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைகளுக்கு ஆளுநர் ரவியே பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications