திண்டுக்கல் அருகே மருமகன் இறந்த 24 மணி நேரத்தில் மாமியார் சாவு.. கணவர், தாயை பறிகொடுத்த கர்ப்பிணி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தில் மருமகன், சாலையோர அறிவிப்பு பலகையில் மோதி உயிரிழந்தார். இதை கேள்விப்பட்ட அதிர்ச்சியில் மாமியாரும் மாரடைப்பால் இறந்து போனார். இதனால் வெறும் 24 மணி நேரத்தில் கணவர், தாயை பறி கொடுத்த கர்ப்பிணி பெண் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கொடைரோடு அருகே ஜெகநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 24). இவர், கொடைரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாளராக வேலை செய்து வந்தார். அவருடைய மனைவி நாகம்மாள். தற்போது இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்தநிலையில் பிரசவத்துக்காக, திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு நாகம்மாள் சென்று விட்டார். தினமும் வேலை முடிந்ததும் கொடைரோட்டில் இருந்து சிலுக்குவார்பட்டிக்கு சென்று, தனது மனைவியை அருண்குமார் பார்த்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதன்படி கடந்த ஆகஸ்ட் 26-ந்தேதி இரவு நாகம்மாளை பார்ப்பதற்காக கொடைரோட்டில் இருந்து சிலுக்குவார்பட்டி நோக்கி அருண்குமார் மோட்டார் சைக்கிளில் சென்றார். அம்மையநாயக்கனூர் பள்ளிவாசல் அருகே மதுரை சாலையில் பைக்கில் அருண்குமார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் இருந்த அறிவிப்பு பலகையில் திடீரென அருண்குமார் பைக்குடன் பயங்கர மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அருண்குமார் பரிதாபமாக இறந்து போனார்.
நிறைமாத கர்ப்பிணியான தனது மகள் பிரசவத்துக்கு வந்த நேரத்தில், மருமகன் விபத்தில் சிக்கி உயிரிழந்த தகவலை கேட்டு நாகம்மாளின் தாயார் கதறி அழுதார். தனது மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டதே என்ற கவலையில் சின்னப்பொண்ணு வாடி துடித்தார். இது ஒருபுறம் எனில் மருமகன் அருண்குமாரின் இறப்பும் சின்னப்பொண்ணுவை வெகுவாக பாதித்தது. மருமகன் இறந்த வேதனையில் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் சின்னப்பொண்ணு புலம்பியபடி இருந்தார். இதற்கிடையே அருண்குமாரின் இறுதிச்சடங்கு முடிந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சின்னப்பொண்ணு சிலுக்குவார்பட்டியில் உள்ள தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சின்னப்பொண்ணு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்தில் மருமகன் பலியான துக்கம் தாங்க முடியாமல், அதிர்ச்சியில் மாமியார் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதேபோல் கணவர், தாய் ஆகியோரை அடுத்தடுத்து பறி கொடுத்த நாகம்மாள் கதறி அழுத காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது.












Click it and Unblock the Notifications