வடஇந்தியர்கள் தமிழ் கற்க வேண்டும்.. சொன்னது யாரு? பிரதமர் மோடி முன்னிலையில் போட்டு தாக்கிய ஸ்டாலின்!
திண்டுக்கல் : வட இந்தியர்கள் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியை கற்க வேண்டும், அதுவும் தமிழ் மொழியாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் மகாத்மா காந்தி என பிரதமர் மோடி வீற்றிருந்த மேடையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இந்தி மொழி திணிப்பு முயற்சிகளில் பாஜக அரசு ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் முன்னிலையில், தமிழை பெருமைப்படுத்தி முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
அதுவும் குறிப்பாக, இந்தி மொழி பேசாத மாநிலங்களில், இந்தியை திணிக்க பாஜக முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில், வட இந்தியர்கள், தமிழ் மொழி கற்க வேண்டும் என காந்தி கூறியதைச் சுட்டிக்காட்டி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
சில நிமிடங்களே உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தனது பேச்சில் இந்தி மொழியை திணிக்க முயலும் பாஜக அரசை சாடியுள்ளதாக திமுக உடன்பிறப்புகள் உற்சாகமாக கூறுகின்றனர்.

பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் உள்ள காந்தி கிராம நிறுவனம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி அதன் பவளவிழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. அத்துடன் காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவும் இன்று நடைபெறுகிறது. திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

குஜராத் காந்தி - தமிழ்நாடு
இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "குஜராத்தில் பிறந்து ஒற்றுமையையும், சமூக நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி இந்திய தேசத்தின் தந்தையாக வலம் வந்த அண்ணல் காந்திக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு மிக மிக அதிகம். தனது வாழ்நாளில் 26 முறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள மகாத்மா காந்தி, தமிழை மிகவும் விரும்பிக் கற்றவர். மோ.க.காந்தி என தமிழில் கையெழுத்திட்டவர்.

வட இந்தியர் - தமிழ் மொழி
திருக்குறளை படிப்பதற்காகவே தமிழ் கற்கவேண்டும் என்று சொன்னவர் காந்தி. இவை அனைத்திற்கும் மேலாக உயராடை அணிந்து அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்த அவரை அரையாடை கட்ட வைத்தது தமிழ் மண். வட இந்தியர்கள் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியை கற்க வேண்டும், அது தமிழாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் காந்தி. அத்தகைய காந்தியடிகள் பெயரால் அமைந்த பல்கலைக்கழகத்தில் இந்த பட்டமளிப்பு விழா நடப்பது பெருமை." என உரையாற்றினார்.

கல்வி - தமிழக அரசு
மேலும், "தமிழ்நாட்டில் இன்று மாநில அரசின் கட்டுப்பாட்டில் 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன; இந்தியாவிலேயே உயர் கல்வியில் சிறந்து விளங்குகிறது தமிழ்நாடு. இதனை மேலும் வலிமைப்படுத்த புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. 7.5% உள் ஒதுக்கீடு வழங்கி அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வியை உறுதி செய்தது தமிழ்நாடு அரசு. கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டும்" என்றும் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

இந்தி மொழி திணிப்பு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ச்சியாக, இந்தி திணிப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக, கல்வி நிலையங்களில் இந்தி மொழி கட்டாயம் என்ற பாஜகவின் செயல்பாடுகள் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் கூட ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழி பாடம் கட்டாயமாக இடம்பெறச் செய்ய வேண்டும் என அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்ற குழு குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை அளித்தது.
இந்தி மொழி திணிப்பு
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ச்சியாக, இந்தி திணிப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக, கல்வி நிலையங்களில் இந்தி மொழி கட்டாயம் என்ற பாஜகவின் செயல்பாடுகள் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் கூட ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழி பாடம் கட்டாயமாக இடம்பெறச் செய்ய வேண்டும் என அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்ற குழு குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை அளித்தது.

இந்தி எதிர்ப்பு
அமித்ஷா குழுவின் இந்தப் பரிந்துரை நாடு முழுவதும் கண்டனங்களைக் கிளப்பிய நிலையில், உடனடியாக ஆர்ப்பாட்டங்களை நடத்தியது திமுக. மேலும், தமிழக சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானத்தையும் நிறைவேற்றியது. அதோடு, இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்களையும் தமிழகம் முழுவதும் நடத்தியுள்ளது திமுக. இந்நிலையில் தான் பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டே, வட இந்தியர்கள் தமிழ் கற்க வேண்டும் என மகாத்மா காந்தி கூறியதை சுட்டிக் காட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications