ஓபிஎஸ்-க்கு பதவி வெறி.. அதிமுகவில் இருந்து துரோகிகளை வெளியேற்றுவோம்.. நத்தம் விஸ்வநாதன் ஆவேசம்!
திண்டுக்கல்: முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டதால் கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கபட்டதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. மூன்று மாதங்களாக ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பில் உட்கட்சி மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால் ரத்தத்தின் ரத்தங்களான அதிமுகவினர், யாரை ஆதரிப்பது என்று தெரியாமல் முழித்து வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின் ஓபிஎஸ்-ன் கைகள் ஓங்கியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு எவ்வித சலனமும் இல்லாமல் இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது. டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடனும் ஓபிஎஸ் தரப்பில் பேசப்பட்டு வருகிறது. இதனால் நாளுக்கு நாள் ஓபிஎஸ்-ன் பலம் அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டம்
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொண்டர்களை சந்தித்து ஆதரவு பெறுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி முக்கியத் தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் தனியார் விடுதியில் அதிமுகவின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது . இந்தக் கூட்டத்தில் எடப்பாடி ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டார் . இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் ஒன்றிய கிளைச் செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர் .

நத்தம் விஸ்வநாதன் பேச்சு
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டதால் ஓபிஎஸ் நீக்கப்பட்டார். மக்கள் மனதில் எடப்பாடி தான் முதலமைச்சர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் கூட ஓபிஎஸ்-க்கு முதலமைச்சர் பதவி வழங்கி இருக்க மாட்டார்கள். ஓபிஎஸ் முதலமைச்சராக வேண்டும் என்ற வெறியில் இருக்கிறார்.

ஓபிஎஸ் மீது குற்றச்சாட்டு
ஜெயலலிதாவின் ஆசைப்படி மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்றால் இப்படிப்பட்ட துரோகிகளை வெளியேற்ற வேண்டும். மீதம் உள்ளவர்களை வைத்து அதிமுகவால் வெற்றி பெற முடியும். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு உரிய உயர்வு கிடைக்கும் என கிளைச் செயலாளர் மத்தியில் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.

சசிகலா, தினகரன் மீது விமர்சனம்
மேலும் கட்சி யாருடன் கூட்டணி வைக்க கூடாது என ஓபிஎஸ் கூறினாரோ, அவர்களுடன் தற்போது கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என கூறுவது ஏற்றுக் கொள்வதாக இல்லை என்று நத்தம் விஸ்வநாதன் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications