ஈடி ரெய்டுக்கு இடையே.. அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டிற்கு வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்.. திமுகவில் இணைகிறாரா?
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ பெரியசாமியின் வீட்டில் இன்று காலை 6 மணியில் இருந்து அமலாக்கத்துறை (ED raids I Periyasamy house) அதிகாரிகள் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், ஓ பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான சுப்புரத்தினம் ஐ பெரியசாமியின் வீட்டுக்கு வந்துள்ளார். திமுகவில் சுப்புரத்தினம் இணையப் போவதாக தகவல் வெளியான நிலையில் அமைச்சரின் வீட்டுக்கு வந்தது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளர் ஐ பெரியசாமியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட சி ஆர் பி எப் வீரர்கள் உதவியுடன் ஐந்து அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

ஐ பெரியசாமி வீட்டில் ஈடி ரெய்டு
கடந்த திமுக ஆட்சியின் போது வீட்டு வசதித் துறை அமைச்சராக ஐ பெரியசாமி இருந்த போது அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டுக்கு சட்டவிரோதமாக வீட்டுமனை ஒதுக்கீடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்த புகாரின் பேரிலேயே இந்த சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அமைச்சரின் வீட்டில் சோதனை நடைபெறும் தகவலை கேட்டு ஏராளமான திமுகவினர் அமைச்சர் வீட்டு முன்பு குவிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரியசாமி வீட்டின் முன்பு திமுக தொண்டர்களின் எண்ணிக்கை அதிகமானதால் வீட்டின் பிற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டை சுற்றி துப்பாக்கியுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐ பெரியசாமி வீட்டில் ஓபிஎஸ் ஆதரவாளர்
இது ஒருபுறம் இருக்க அமைச்சரின் வீட்டுக்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ வந்ததுதான் தற்போது பேசு பொருளாகி இருக்கிறது. பழனி சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும் வழக்கறிஞருமான சுப்புரத்தினம் திடீரென அமைச்சர் ஐ பெரியசாமியின் வீட்டு வாசலில் துணை மேயர் ராஜபாவுடன் அமர்ந்திருந்தார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எம்எல்ஏவாக இருந்த அவர் தொடர்ந்து அதிமுகவிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.
நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மாவட்ட செயலாளர் இருந்தபோது மீண்டும் அவர் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. தொடர்ந்து அதிமுகவிலிருந்து ஓ பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டபோது அவரது தீவிர ஆதரவாளராக மாறினார் சுப்புரத்தினம். ஓ பன்னீர்செல்வத்தின் பல வழக்குகளில் நேரில் ஆஜராகி வாதாடியவர் சுப்புரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவில் இணையும் சுப்புரத்தினம்?
மேலும் தொலைக்காட்சி youtube சேனல்களிலும் ஓபிஎஸ் தரப்பில் கலந்து கொண்டு வாதங்களை முன்வைத்து வந்தார். இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வத்தின் அரசியல் குழப்ப முடிவுகளால் அதிருப்தியில் இருக்கும் அவர் விரைவில் திமுகவில் இணையலாம் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் ஐ பெரியசாமியின் வீட்டில் சோதனை நடத்தி வரும் நிலையில் திடீரென அங்கு வந்த சுப்புரத்தினம் துணை மேயர் ராஜப்பாவுடன் அமர்ந்திருந்தது பேசுபொருளாகியுள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதை கவனித்தவர் திடீரென அந்த இடத்தில் இருந்து மாயமானார். அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா, மைத்ரேயன் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் பலரும் திமுகவில் ஐக்கியமாகி வரும் நிலையில் தற்போது ஓபிஎஸ் -இன் தீவிர ஆதரவாளர் அமலாக்கத்துறை ரெய்டின் போது அமைச்சர் வீட்டுக்கு வந்தது திண்டுக்கல் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications