அன்றே கணித்த ஓபிஎஸ்! அதிமுகவில் அணி தாவிய ’திண்டுக்கல்’ நிர்வாகிகள்! இன்னும் லிஸ்ட் நிறைய இருக்காம்!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவு நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதாக ஒன் இந்தியா தமிழ் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் இன்று திண்டுக்கல்லை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் தேனியில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இன்னும் பலர் அவரை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
'எதிர்காலம் வரும் என் கடமை வரும்' என எம்ஜிஆர் பாடலை ஆவேசமாகப் பாடிக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' என உற்சாகமாக இருக்கிறார். காரணம் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நிர்வாகிகள் அடுத்தடுத்து அவரை சந்தித்து வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரைக் கண்டு கொள்ளாமல் முகத்தை திருப்பிக் கொண்டு சென்ற நிர்வாகிகள் பலரும் இப்போது அவரை நேரில் சந்தித்து பூங்கத்து சால்வையோடு 'அண்ணே இனி நீங்கதான் எல்லாம் அதிமுகவை நீங்கள் தான் வழிநடத்த வேண்டும்' என பேசி ஆதரவளித்து வருகின்றனர். அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமியை விட ஓ.பன்னீர்செல்வத்திற்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தாவும் நிர்வாகிகள்
அதிமுகவின் அதிகாரம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள் பக்கம் தாவிக் கொள்ளலாம் என நேரம் பார்த்து காத்திருந்த நிர்வாகிகள் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தாவி வருகின்றனர். சென்னையில் தங்கி தீவிர ஆலோசனை நடத்தி வந்த ஓ பன்னீர்செல்வம் தற்போது தனது சொந்த ஊரான தேனிக்கு வந்திருக்கும் நிலையில் பெரியகுளத்திலும் சரி கைலாசப்பட்டியில் இருக்கும் அவரது பண்ணை வீட்டுக்கு சென்றாலும் சரி நள்ளிரவு ஒரு மணி ஆனாலும் சந்தித்து வருகின்றனர்.

நள்ளிரவில் சந்திப்பு
நேற்று மட்டும் திண்டுக்கல், சேலம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நள்ளிரவு நேரம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதற்கு இரு காரணங்கள் உள்ளது. ஒன்று அதிமுகவில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட மற்றும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு எதிராக உள்ள நிர்வாகிகளுக்கு அதிகாரத்தை கைப்பற்றிய பின் முக்கிய பதவிகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும், சசிகலா டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்த்து ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்ற வாக்குறுதியும் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

’நல்ல கவனிப்பு’
அடுத்ததாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு 'நல்ல கவனிப்பை' எடப்பாடி பழனிச்சாமி அளித்ததாக கூறப்படும் நிலையில் தற்போது வந்திருக்கும் நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் தரப்பு 'சிறப்பான வரவேற்பை' அழைத்திருப்பதாகவும் அவர்கள் அழைத்து வரும் நிர்வாகிகளை பதவிக்கேற்ப 'வரவேற்பின் சிறப்பு கவனிப்பு' இருக்கும் என உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஓபிஎஸ் தரப்பில் தற்போது ஐக்கியமாகியுள்ள நிர்வாகிகள் பலரும் மேலும் பல நிர்வாகிகளை அழைத்து வருவதற்காக களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

திண்டுக்கல் நிர்வாகிகள்
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பில் இணைந்த நிலையில் அவர்கள் மூலம் மேலும் பலர் அதிமுகவில் ஓபிஎஸ் தரப்பில் இணைய இருப்பதாக ஒன் இந்தியா தமிழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று திண்டுக்கல் சீனிவாசனின் கட்டுப்பாட்டில் உள்ள திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் இன்று தேனியில் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்கள் ஆதரவனை தெரிவித்தனர் ,அவர்களை எல்லாம் அழைத்துச் சென்றவர் ஏற்கனவே ஓபிஎஸ் அணியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் ஆதரவாளரான ரெட்டியார்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் என்பது குறிப்பிடத்தக்கது.

நீளும் பட்டியல்
சொன்னது போலவே அதிமுகவின் திண்டுக்கல் நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இணைந்துள்ள நிலையில் மேலும் பல நிர்வாகிகள் அடுத்த அடுத்த நாட்களில் அவர் அணியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஒட்டன்சத்திரத்தில் உள்ள முக்கிய மூத்த நிர்வாகி, பழனியைச் சேர்ந்த இரு முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் வேடசந்தூரில் இருக்கும் ஒரு மூத்த நிர்வாகி என பட்டியல் தயார் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்களின் ஐக்கியமாகும் அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என்கின்றனர் திண்டுக்கல் ரத்தத்தின் ரத்தங்கள்.












Click it and Unblock the Notifications