ஹெலிகாப்டரில் வரும் பிரதமருக்கு எதுக்கு கொடி கம்பம்? அடம் பிடித்த பாஜகவினர்.. போலீசார் வாக்குவாதம்
திண்டுக்கல்: திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் 63வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பட்டம் வழங்குகிறார்.
பிரதமர் மோடி திண்டுக்கல் வர உள்ள நிலையில் மதுரை ஏர்போர்ட் முதல் திண்டுக்கல் வரை பாஜக கொடிகளை கட்சியினர் நட்டு வைத்துள்ளனர். ஆனால் இதற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திண்டுக்கல்-மதுரை நெடுஞ்சாலையில் மறியல் செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் வருகை
திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். விழாவில், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் மிருதங்க கலைஞர் 'உமையாள்புரம் சிவராமன்' ஆகியோருக்கு டாக்டர் பட்டத்தையும் பிரதமர் வழங்குகிறார். அதேபோல விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரும் பங்கேற்கின்றனர். நாளை(நவ.11) பிற்பகல் 1.50 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடையும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்கிறார்.

பாஜக கொடி
இந்நிலையில் பிரதமரை வரவேற்கும் விதமாக மதுரை விமான நிலையத்திலிருந்து திண்டுக்கல் வரை பாஜகவினர் கொடி கம்பங்களை நட்டு வைத்துள்ளனர். காந்தி கிராம பல்கலை பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் கொடி கம்பம் நடுவதற்கு அனுமதி மறுத்துள்ளனர். ஆனால், இந்த எதிர்ப்பையும் மீறி பாஜகவினர் கொடி கம்பங்களை நட்டு வைத்துள்ளனர். உடனடியாக காவல்துறையினர் நடப்பட்ட கம்பங்களை அகற்ற தொடங்கினர். இதனையடுத்து பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பேச்சு வார்த்தை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த விழாவில் பங்கேற்க இருப்பதால் திமுகவினரும் சாலையின் ஓரத்தில் கட்சி கொடிகளை நட்டு வைத்துள்ளனர். இதனை சுட்டிக்காட்டிய பாஜகவினர் காவல்துறையினர் ஏன் ஒருதலைபட்சமாக செயல்படுகிறீர்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும், கொடி கம்பங்களை பிடுங்குவதெனில் இரு கட்சி கொடிகளையும் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் இதற்கு மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. காவல்துறையினர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கூட்டத்தை கலைத்தனர்.

கண்டனம்
இதனால் திண்டுக்கல்-மதுரை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர்கள் காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து கட்சியின் சமூக ஊடகப் பிரிவு தலைவர் நிர்மல் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், "பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ள நிலையில் திண்டுக்கல் டிஎஸ்பி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். திமுக கட்சிக்காரர் போல் செயல்படுகிறார்" என்று கூறி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும், "பாஜக கொடி கம்பங்களை பிடுங்கி காலால் எட்டி உதைத்து அட்டூழியத்தில் திண்டுக்கல் எஸ்.பி ஈடுபட்டுள்ளார். திமுக எம்எல்ஏவின் உறவினரான திண்டுக்கல் எஸ்பி தேவையில்லாத பதற்றத்தை பிரதமர் வரும்போது ஏற்படுத்தி வருகிறார்" என்று கூறி இதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications