வேளாண்சட்டம் வாபஸ்; இனி இதுபோன்ற ஆணவத்துடன் நடக்காதீர்கள் : மத்திய அரசு மீது சிவசேனா கடும் தாக்கு
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் பிரதமர் மோடி திரும்ப பெறுவதாக அறிவித்தது, மகாராபாரதம், ராமாயணம் நமக்குக் கற்றுக்கொடுப்பது என்னவெனில், ஆணவம் ஒடுக்கப்படும், அழிக்கப்படும் என்பதுதான். ஆனால், போலி இந்துத்துவாவாதிகள், இதை மறந்துவிட்டார்கள். உண்மை, நீதியின் மீது தாக்குதல் நடத்தி, ராவணர் போல் நடக்கிறார்கள் என சிவசேனா கட்சி காட்டமாக தெரிவித்துள்ளது.

3 வேளாண் சட்டங்கள், எதிர்ப்பும் வாபஸும்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 வேளாண்சட்டங்களை மத்திய அரசு அதிரடியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. எதிர்க்கட்சிகளின் குரலையும் கேட்காமல் மெஜாரிட்டி பலம் காரணமாக நிறைவேற்றப்பட்ட சட்டம் உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்று சட்டமானது. இந்த மசோதாவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அதிமுக, பாமக ஆதரித்து வாக்களித்தது. இது கடும் எதிர்ப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியது.

போலி இந்துத்துவவாதிகள் சிவசேனா கடும் தாக்கு
பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதற்கு, வரவேற்பும், விமர்சனமும் வருகிறது. 5 மாநில தேர்தலுக்காக வாபஸ் பெறுகிறார்கள் என்று விமர்சனம் வைக்கப்படுகிறது. இனியும் விவசாயிகளை அடிமைப்படுத்தும் செயலில் ஈடுபடாதீர்கள் என்று ராகுல் எச்சரித்திருந்தார். பாஜகவின் கூட்டாளியாக இருந்து தற்போது எதிரணியில் உள்ள சிவசேனா போலி இந்துத்துவவாதிகள் என கடுமையாக விமர்சித்து சாம்னாவில் எழுதியுள்ளது.
சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடானா சாம்னாவில், பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதை கடுமையாக விமர்சித்து தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
போராடிய டெல்லி விவசாயிகளுக்கு இடையூறு செய்த மத்திய அரசு
"மத்திய அரசு இந்த 3 வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் போது, எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கித்தான் நிறைவேற்றியது. அதன்பின் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை முற்றிலும் நிராகரித்தது. விவசாயிகள் போராட்டம் நடத்திய இடத்தில் அவர்களுக்கு குடிக்க நீர் கிடைக்கவிடாமல், மின்சாரம் கிடைக்கவிடாமல் மத்திய அரசு இடையூறு செய்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காலிஸ்தான்கள், பாகிஸ்தானியர்கள், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தியது மத்திய அரசு.

லக்கிம்பூர் விவசாயிகள் கொலைக்கு இரங்கல் தெரிவிக்காத பிரதமர்
ஆனால், இவ்வளவு நடந்தபோதிலும், விவசாயிகள் தங்கள் போராட்டத்திலிருந்து வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் கோரிக்கையிலிருந்து பின்வாங்கவில்லை. இந்த சட்டங்கள் கார்ப்பரேட்களுக்கும், முதலாளிகளுக்கும் ஆதரவான சட்டம். இந்தப் போராட்டத்தில் 550 விவசாயிகள் உயிரிழந்தனர், லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் மகன் ஒருவர் காரை ஏற்றினார். ஆனால், பிரதமர் மோடி விவசாயிகள் உயிரிழப்புக்கு ஒரு வார்த்தை கூட இரங்கல் தெரிவிக்கவில்லை.

வாபஸ் தேர்தலுக்கான கந்துடைப்பு நாடகம்
விவசாயிகள் இனியும் போராட்டத்தை முடித்துக்கொள்ள மாட்டார்கள் என உணர்ந்தபின், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 13 மாநில இடைத் தேர்தலில் தோல்வி அடைந்தபின், இந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தேர்தலை முன்வைத்து எடுக்கப்பட்ட, கண்துடைப்பு நடவடிக்கை. ஆனால், இந்த வெற்றி விவசாயிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி.

ராவணன் போல் ஆணவமாக நடக்காதீர்கள்
மகாராபாரதம், ராமாயனம் நமக்குக் கற்றுக்கொடுப்பது என்னவென்றால், ஆணவம் ஒடுக்கப்படும், அழிக்கப்படும் என்பதுதான். ஆனால், போலி இந்துத்துவாவாதிகள், இதை மறந்துவிட்டார்கள். உண்மை, நீதியின் மீது தாக்குதல் நடத்தி, ராவணர் போல் அவர்கள் நடக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையைப் பெறுங்கள்
எதிர்காலத்தில் இதுபோன்ற ஆணவத்துடன் மத்திய அரசு நடக்காமல் சட்டம் இயற்றும் முன், தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையைப் பெற்று செயல்பட வேண்டும். அநீதி, சர்வாதிகாரத்துக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும்"
இவ்வாறு சிவசேனா அதிகாரப்பூர்வ பத்திரிக்கை சாம்னா தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications