சில வெட்டுக்கிளிகள் பிரிந்தால் என்ன.. அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது.. கொந்தளித்த செங்கோட்டையன்!
ஈரோடு: சில வெட்டுக்கிளிகள், வேடந்தாங்கல் பறவைகள் பிரிந்து சென்றாலும் தமிழ் மண்ணில் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக தரப்பில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பூத் கமிட்டி அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பூத் கமிட்டி அமைப்பது குறித்து சத்தியமங்கலத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சத்தியமங்கலம், தாளவாடி, பவானிசாகர், கடம்பூர் மற்றும் புஞ்செய் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இப்படியா பேசுவது.. 'செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலக வேண்டும்'- கோவை செல்வராஜ் பரபர

தனித்து நிற்கும் அதிமுக
இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை பேசினார். குறிப்பாக ஓபிஎஸ் மற்றும் பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார். அதில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவால் தனித்து நிற்க முடியும். வேறு எந்த கட்சியாலும் தனித்து நிற்க முடியாது. அதற்கு அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியே இருப்பதே காரணம். அதிமுகவின் தொண்டர்கள் உற்சாகமாக வேலை செய்து வருகின்றனர்.

திராவிடம் நிலைக்க காரணம்
மனித நேயமிக்க தலைவர்கள் இருந்ததாலும், பெரியாரின் கொள்கைகளாலும் தமிழ்நாட்டில் திராவிடம் நிலைத்து நிற்கிறது. அதிமுகவுக்கு ஆதரவான வாக்காளர்களை சேர்க்க வேண்டும். தற்போது வாக்குக்கு ரூ.2 ஆயிரம் ஆகிவிட்டது. எதிர்க்கட்சியினர் ரூ.1000 கொடுக்கின்றனர். அதனால் அதிமுக ரூ.1500 தருமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் இருக்கிறது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்டு முழுவதும் பணம் கிடைக்கும் என மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்.

சில வெட்டுக்கிளிகள்
அதேபோல் அதிமுகவை விட்டுசென்றவர்கள் பற்றி கவலை வேண்டாம். சில வெட்டுக்கிளிகள், வேடந்தாங்கல் பறவைகள் பிரிந்து சென்றாலும் தமிழ் மண்ணில் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று தெரிவித்தார். ஒரே மேடையில் பாஜக மற்றும் ஓபிஎஸ் அணியை மறைமுகமாக செங்கோட்டையன் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் என்ன?
இதற்கு ஓபிஎஸ் - அமித் ஷா இடையிலான சந்திப்பு காரணமாக இருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சென்னை வந்த அமித் ஷா, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன நிகழ்ச்சியில் ஓபிஎஸ்-ஐ சந்தித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை. இதனால் இரு தரப்பையும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.