ஜன.31ல் மாவட்டத் தலைவர்கள் கூட்டம்.. இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு என்ன? விபி துரைசாமி சொன்ன தகவல்!
ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து வரும் 31ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று விபி துரைசாமி கூறியுள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து அண்ணாமலை தலைமையில் நடக்க உள்ள பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் விபி துரைசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன் மூலம் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்தது. திமுக கூட்டணியில் எந்த சர்ச்சையுமின்றி காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் காங்கிரஸ் கட்சியிலும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வாக்கு சேகரிக்கும் பணிகல் தொடங்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் யார்?
ஆனால் ஈரோடு இடைத்தேர்தல் களம் அதிமுகவின் உட்கட்சி பூசலை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இரு அணிகளும் தங்கள் தரப்பில் வேட்பாளரை நிறுத்த ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் வேட்பாளர் யார் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.

பாமக ஆதரவில்லை
அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் நட்பு கட்சிகளாக அறியப்பட்ட பாமக ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை எந்த கட்சிக்கு ஆதரவும் இல்லை என்று அறிவித்துள்ளது. அதேபோல் தேமுதிகவும் தனித்து வேட்பாளரை களமிறக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் டிடிவி தினகரனும் வேட்பாளரை களமிறக்கியுள்ளார்.

பாஜக நிலைப்பாடு?
இதனிடையே அதிமுகவின் கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை பெறுவதில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இரு அணிகளும் மும்முரமாக இருந்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவின் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு இதுநாள் வரை விடை கொடுக்கப்படாமல் இருக்கிறது. இரு அணிகளும் நேரடியாக கமலாலயம் சென்று ஆதரவு கோரியும் இதுநாள் வரை பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

விபி துரைசாமி தகவல்
இந்த நிலையில் பாஜக துணைத் தலைவர் விபி துரைசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் வரும் 31ம் தேதி நடக்க உள்ளது. அந்தக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 31ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பாஜகவின் நிலைப்பாடு அன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ளது அதிமுக தொண்டர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications