திமுகவின் வெற்றிக்கு அணிலாக உதவும் விஜய்? மக்கள் நலக்கூட்டணி ஸ்டைலில் வாக்கை பிரித்த தவெக?
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியலில் மீண்டும் ஒருமுறை "மூன்றாவது முனை" ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமைந்திருப்பதை அப்பட்டமாகத் காட்டுகின்றன. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பிரிக்கும் வாக்குகள், ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மறைமுகக் காரணியாக மாறியிருப்பதை புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.
2016-ன் மறுபதிப்பா 2026?
தமிழக அரசியல் வரலாற்றில் 2016 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியமான பாடம். அன்று ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிராகக் கடுமையான அதிருப்தி இருந்தபோதிலும், 'மக்கள் நலக் கூட்டணி' என்ற மூன்றாவது அணி பிரித்த வாக்குகள் திமுகவின் வெற்றியைத் தட்டிப்பறித்தன. அன்று விஜயகாந்தின் தேமுதிக தலைமையிலான கூட்டணி வாக்குகளைப் பிரித்ததால், மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
சரியாக பத்து ஆண்டுகள் கழித்து, அதே போன்ற ஒரு சூழல் இப்போது உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. தற்போது வெளியாகியுள்ள Agni News Services, Peoples Pulse, மற்றும் P-MARQ ஆகிய நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை (118 இடங்களுக்கு மேல்) கிடைக்கும் எனக் கணிக்கின்றன. இதற்குப் பின்னால் இருக்கும் ரகசியம், அதிமுகவின் வாக்கு வங்கியில் தவெக ஏற்படுத்தியுள்ள ஓட்டைதான்.

AGNI நியூஸ் சர்வீசஸ் (Agni News Services):
திமுக+: 169
அதிமுக+: 64
தவெக: 1
மற்றவை: 4
பீப்பிள்ஸ் பல்ஸ் (Peoples Pulse):
திமுக+: 125-145
அதிமுக+: 65-80
தவெக: 18-24
மற்றவை: 2-6
மின்னம்பலம் (Minnamambalam):
திமுக+: 155
அதிமுக+: 72
தவெக: 5
மற்றவை: 2
பி-மார்க் (P-MARQ):
திமுக+: 125-145
அதிமுக+: 65-85
தவெக: 16-26
மற்றவை: 1-6
மேட்ரைஸ் (Matrize):
திமுக+: 122-132
அதிமுக+: 87-110
தவெக: 10-12
மற்றவை: 0-6
சாணக்யா ஸ்டிரேட்டஜிஸ் (Chanakya Strategies):
திமுக+: 145-160
அதிமுக+: 50-65
தவெக: 13-18
மற்றவை: 5-8
ஓட்டுப் பிரிப்பும் திமுகவின் சாதகமும்
கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, தவெக 15 முதல் 26 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இது ஒரு புதிய கட்சிக்கு மிகப்பெரிய தொடக்கம் என்றாலும், இதன் பின்னணியில் உள்ள அரசியல் கணக்கு திமுகவுக்குத்தான் சாதகமாக முடிகிறது:
எதிர்ப்பு வாக்குகளின் சிதறல்: பொதுவாக, ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் அனைத்தும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குச் செல்ல வேண்டும். ஆனால், விஜய் என்ற ஆளுமை களத்தில் இறங்கியதும், அந்த அதிருப்தி வாக்குகள் அதிமுக மற்றும் தவெக என இரண்டாகப் பிரிகின்றன. இதனால், திமுக தனது 'கேடர்' (Cadre) வாக்குகளை மட்டும் சரியாகத் தக்கவைத்துக் கொண்டாலே எளிதாக வெற்றி பெற்றுவிடுகிறது.
இளைஞர் மற்றும் நடுநிலை வாக்குகள்: புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் அதிமுகவுக்குச் செல்வதைத் தவெக தடுத்துள்ளது. Chanakya Strategies கணிப்பின்படி, தவெக 13-18 இடங்களைப் பிடிக்கும் சூழலில், அது பெரும்பாலும் அதிமுகவின் வெற்றியைப் பாதிக்கக்கூடிய தொகுதிகளாகவே உள்ளன.
முனைப்போட்டி (Multi-cornered Contest): நான்கு முனைப் போட்டிகள் நிலவும்போது, வெற்றி பெறுவதற்குத் தேவையான வாக்குகளின் சதவீதம் குறையும். திமுக தனது உறுதியான 30-33% வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ளும் நிலையில், மீதமுள்ள 60-70% வாக்குகள் அதிமுக, தவெக, மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு இடையே சிதறுகின்றன. இது திமுக கூட்டணி வேட்பாளர்கள் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வழிவகுக்கிறது.
புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை
கருத்துக்கணிப்புப் பட்டியலில் Matrize நிறுவனம் அதிமுகவுக்கு 87-110 இடங்கள் வரை வரலாம் எனக் கணித்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் தவெக 10-12 இடங்களைப் பிடிக்கும் என்றும் கூறுகிறது. இந்த 12 இடங்கள் மற்றும் தவெக கவரக்கூடிய 10-15 சதவீத வாக்குகள் மட்டும் அதிமுக பக்கம் இருந்திருந்தால், முடிவுகள் அப்படியே தலைகீழாக மாறியிருக்கக்கூடும்.
ஆக்னி நியூஸ் சர்வீசஸ் கணித்துள்ள 169 இடங்கள் என்பது திமுகவுக்கு மிகப்பெரிய பலத்தைக் காட்டினாலும், மக்கள் பல்ஸ் (Peoples Pulse) மற்றும் பி-மார்க் (P-MARQ) கணிப்புகள் காட்டும் 125-145 இடங்கள் என்பது போட்டி கடுமையாக இருப்பதையே உணர்த்துகின்றன. இந்த நெருக்கடியான சூழலில், தவெக பிரிக்கும் ஒவ்வொரு வாக்கும் திமுகவின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் 'லைஃப் ஜாக்கெட்' போலச் செயல்படுகிறது.
2016-ல் மக்கள் நலக் கூட்டணி எப்படி அதிமுகவின் வெற்றிக்குத் தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ உதவியதோ, அதே வேலையை 2026-ல் தவெக செய்கிறது என்ற விமர்சனத்தை இந்தப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை ஒருமுகப்படுத்த விடாமல் சிதறடிப்பது, எப்போதும் ஆளுங்கட்சிக்கே சாதகமாக முடியும்.
மே 4-ஆம் தேதி வெளியாகப்போகும் அதிகாரப்பூர்வ முடிவுகள், விஜய் ஒரு 'கிங்' ஆக உருவெடுப்பாரா அல்லது திமுகவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவிய 'காரணியாக' மட்டும் இருப்பாரா என்பதைத் தீர்மானிக்கும். எது எப்படியோ, இப்போதைய கருத்துக்கணிப்புகள் தமிழக அரசியலில் "வாக்குப் பிரிப்பு" (Vote Splitting) என்ற தந்திரமே மீண்டும் ஒருமுறை ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கப் போகிறது என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications