செல்லபாண்டியன் ஈரோட்டில் கருப்பு சட்டை, வெண்தாடியுடன் வாக்கு கேட்டாரே? இப்ப ஓட்டு பாருங்க: Exclusive
ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சிகள் நேருக்கு நேர் மோதிய சூழலில், ஏராளமான சுயேச்சைகளும் களம் கண்டனர்.. அந்தவகையில் பெரியார் கெட்டப்பிலேயே, ஈரோட்டு மக்களிடம் வாக்கு சேகரித்த சுயேச்சை வேட்பாளர் செல்லபாண்டியன்.. இவர் பெற்ற ஓட்டு எவ்வளவு தெரியுமா? இதை பற்றி செல்லபாண்டியனே, நம்முடைய ஒன்இந்தியா-வுக்காக சில விஷயங்களே பகிர்ந்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டம் கீழராஜ குலராமன் கிராமத்தை பூர்வீமாக கொண்டவர் செல்லப்பாண்டி.. தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவராக உள்ளார். மதுவுக்கு எதிரான பிரச்சாரங்களையும், விழிப்புணர்வையும் தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி வருபவர். டாஸ்மாக்கில் இப்படி கிளப் டான்ஸ் ஆடறாங்களே.. வெறுத்து போயிட்டேன். யாருமே கண்டிக்க மாட்டீங்களா? என்று நொந்துபோய் பலமுறை கேட்டவர்.

ஆனால், தேர்தல் என்று வந்துவிட்டால், செல்லப்பாண்டியன் பெரிய பெரிய கட்சிகளுடன் மோதி களம் காண்பவர்.. ஒவ்வொருமுறை தேர்தலின்போதும், வித்தியாசமான, முறையில் வேட்பு மனு தாக்கல் செய்வது இவரது ஸ்டைலாகும்.
தாலிக்கயிறு: கடந்தமுறை தேர்தலின்போது, சாத்தூர் தொகுதி வேட்பாளராக தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார் செல்லபாண்டியன். அப்போது, ஒரு கையில் தாலியுடனும், கழுத்தில் பல தாலிக் கயிறுகள் தொங்கியபடியும் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதாவது, மது குடித்தால் உயிரிழப்பு ஏற்பட்டு தனது குடும்பத்தைப் பாதிக்கும் என்பதை வலியுறுத்துவதற்காகவே இப்படி தாலிக்கயிறுகளுடன் வந்தார்.
கடந்த முறை நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலினபோதும், மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம், ஆறுமுகம் என்பவரை வேட்பாளராக அறிவித்தது. ஆனால், கையில் டெபாசிட் தொகை இல்லை என்பதால், டாஸ்மாக் கடைகளின் வெளியே கிடக்கும் காலி பாட்டில்களைப் பொறுக்கி, அவைகளை விற்பனை செய்து, அதைவைத்து, டெபாசிட் தொகையை கட்டினார்.
காலி பாட்டில்: அதுமட்டுமல்ல, "காலி பாட்டில்கள் தான் எங்களுக்கு நிதி, டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தான் எங்களுக்கு கதி" என்ற முழக்கத்தோடு, காலி பாட்டில்களை பொறுக்கினார்.
ஒவ்வொருமுறையும் தேர்தலில் தோல்வி அடைந்தாலும், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து போட்டிடியிட்டு வருகிறது இந்த சங்கம்... அந்தவகையில், இந்த முறை ஈரோடு இடைத்தேர்தலில், சங்க தலைவர் செல்லபாண்டியனே நேரடியாக தேர்தல் களத்தில் குதித்துவிட்டார்.. மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்துக்கு ஷூ சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது..
சீமான் பெரியாரை பற்றி பேசி விமர்சனம் செய்திருந்த நிலையில், அதே பெரியாரை கையில் எடுத்து ஆதரவு திரட்டினார் செல்லபாண்டியன். அதேபோல, பெரியார் போலவே வேடமிட்டு, ஈரோட்டு தெருக்களில் ஓட்டு கேட்டார்..
அதுமட்டுமல்ல, ஜனநாயக முறையில் இடைத்தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்காக, வித்தியாசமாக சாட்டையால் அடித்துக் கொண்டு, ஈரோடு மக்களின் கவனத்தை பெற்றிருந்தார் சுயேட்சை வேட்பாளர் செல்லபாண்டி.
ஒன் இந்தியா பேட்டி: இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் திமுக காலையிலிருந்தே முன்னிலையில் இருந்து வந்த நிலையில், தற்போது அபார வெற்றி பெற்றுள்ளது.. இதையடுத்து, "ஒன்இந்தியா தமிழ்" சார்பாக, சங்க தலைவரும், வேட்பாளருமான செல்லபாண்டியனிடம் நாம் தொடர்பு கொண்டு பேசினோம்.. இடைத்தேர்தலில் எவ்வளவு ஓட்டுக்களை நீங்கள் வாங்கியிருக்கிறீர்கள்? உங்களது பிரச்சாரம் ஈரோடு மக்களிடம் எந்த அளவுக்கு எடுபட்டது? என்றும் கேட்டோம்.
அதற்கு செல்லபாண்டி நம்மிடம், "எப்போதுமே, ஓட்டு எண்ணிக்கையை முன்வைத்து நான் பிரச்சாரம் செய்வதில்லை.. இந்த அப்படிதான் நான் களமிறங்கினேன்.. இந்த பெரியார் பூமியில், அவர் வளர்த்த அண்ணாதுரை, காஞ்சிபுரத்திலேயே தோற்கடிக்கப்பட்டார்.. விருதுநகரிலேயே பெருந்தலைர் காமராஜர் தோற்கடிக்கப்பட்டார்.. ராமநாதபுரம் மன்னன் சேதுபதி, ஒரு கூலிக்காரரால் தோற்கடிக்கப்பட்டார். அன்றைய காலத்தில் அப்படியொரு தேர்தல் களம் நிலவியது.
பின்னடைவு: அதுபோலவே, இன்றும் ஜனநாயக முறையில் மக்கள் வாக்களிக்க வேண்டும். இதை வலியுறுத்திதான், ஈரோட்டில் பெரியார் சிலை முன்பு நின்றுகொண்டு, என்னை நானே சாட்டையால் அடித்து கொண்டு ஓட்டு கேட்டேன். சுயேச்சையாக போட்டியிட்ட எனக்கு, இதுவரை 40 ஓட்டுக்கள் கிடைத்திருக்கின்றன..
ஆனால், பெரியாருக்கு எதிராக பேசிய சீமான் பின்னடைவு பெற்றிருக்கிறார். இன்று திமுகவுக்கு கிடைத்துள்ள வெற்றி என்பது பெரியாருக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன்.. பகுத்தறிவு கொள்கை ஒருபோதும் விழாது" என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் செல்லபாண்டியன்.












Click it and Unblock the Notifications