ஈரோட்டில் "விழுந்த" இடி.. கோயம்பேடே பரவாயில்ல போல.. 1 கிலோ ரூ.500.. இல்லத்தரசிகளை பதறவைத்த "பூண்டு"
ஈரோடு: சமீப நாட்களாகவே, சென்னையில் வரலாறு காணாத விலையில் பூண்டு விற்கப்பட்டு வரும் நிலையில், ஈரோடு மாவட்டம் அதற்கு மேல் அதிர்ச்சி தந்துள்ளது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, வடமாநிலங்களிலிருந்துதான் பூண்டு அதிகளவில் இறக்குமதியாகிறது.. ஆனால், வட மாநிலங்களில் கடந்த சில வருடங்களாகவே, பூண்டு பயிரிடப்பட்டும், விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை.. அதனால், அதிக நஷ்டம் ஏற்பட்டதால், விளைச்சலையும் விவசாயிகள் குறைத்து பயிரிட்டனர்.

வெளிமாநிலங்கள்: இதன்காரணமாக, பூண்டு அறுவடைக் காலம் தொடங்கியபோது, தமிழக சந்தைகளில் பூண்டு வரத்தும் குறைவாகவே காணப்படுகிறது.. வெளிமாநிலங்களை தவிர, நீலகிரி, கொடைக்கானல், திண்டுக்கல், ஈரோடு போன்ற மாவட்டங்களிலும், பூண்டு பயிரிடப்படுகிறது. இந்த பூண்டுகளும், தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த 2023, ஜனவரி மாதம் ஒரு கிலோ பூண்டு ரூ.50-க்கு மட்டுமே விற்கப்பட்ட நிலையில் இப்போது, 10 மடங்கு வரை விலை எகிறிவிட்டது... கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 30 லாரிகளில் கொண்ட வரப்படும் பூண்டு, இப்போது வெறும் 9 லாரிகளில் மட்டுமே கொண்டு வரப்படுகிறதாம்.
ஈரோடு மாவட்டம்: ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, வ.உ.சி. காய்கறி சந்தைக்கு தமிழகம், கர்நாடகா, காஷ்மீர் உட்பட வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் வரக்கூடிய பூண்டு மூட்டை வரத்து, கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வருகிறது.. எனவே, கடந்த சில தினங்களுக்கு முன்புவரை கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பூண்டு, இப்போது 400 ரூபாய் எகிறிவிட்டதாம்.
இதனால் மொத்தம் வியாபாரமும், சில்லரை வியாபாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுவிட்டதாக விவசாயிகள் கவலையுடன் கூறுகிறார்கள். பூண்டு விலையை கேட்டு, நடுத்தர ஏழை மக்களும், இல்லத்தரசிகளும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே, வெங்காயம், தக்காளி விலை உயர்ந்துவிட்டது. அந்த விலைகளுடன், இஞ்சி மற்றும் பூண்டு விலைகளும் உயர்ந்துள்ளது பெருத்த கவலையை ஏற்படுத்தி வருகிறது.
நம்பிக்கை: ஏற்றத்தைக் கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வியாபாரிகள், பொதுமக்கள் விடுக்க துவங்கி உள்ளனர். ஆனால், இப்போது, பூண்டின் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததாலும், வடமாநிலங்களில் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாலும் பூண்டின் விலை உச்சத்தில் உள்ளது. எப்படியும், பூண்டின் விலை இந்த மாதத்துக்குள் மெல்ல மெல்ல குறைந்து, ரூ.150-க்குள் வந்துவிடும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications