ஈரோட்டில் மீன் பெட்டிகளில் துண்டு துண்டாக அது என்ன? பிக்கப் வேனில் எட்டிப்பார்த்து ஆடிப்போன போலீசார்
ஈரோடு: ஈரோட்டில் இரவு நேரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.. சமீபத்தில் குமுளி அருகே தனியார் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட 3 சந்தன மரங்களை, வெட்டிக் கடத்திய இருவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்திருந்ததும், அவர்களிடமிருந்து சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 89 கிலோ சந்தன கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டதும் நினைவிருக்கலாம்.. அதேபோல ஈரோட்டிலும் ஒரு சம்பவம் நடந்து 2 பேர் சிக்கியிருக்கிறார்கள். அவர்களிடம் வனத்துறையினர் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.
வனச்சட்டத்தை பொறுத்தவரை, தமிழகத்தில் சந்தன மரங்களை வெட்டுவதற்கும் விற்பதற்கும் யாருக்கும் அனுமதி கிடையாது.. வனத்துறை அதிகாரியின் அனுமதி, அதற்குரிய சான்றிதழ்கள் இருந்தால்தான், வனத்துறையின் அனுமதியுடன் மரம் வெட்டி அரசுக்கு விற்க முடியும்..

சந்தன மரங்கள்
சந்தன மரங்களை உங்கள் நிலத்தில் வளர்ப்பதானாலும், அதனை வெட்டி விற்பதானாலும் வனத்துறை அதிகாரியிடம் உரிமம் மற்றும் அனுமதியை பெற வேண்டும். மேலும், சந்தன மரங்களை வைத்திருப்பதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
அந்தவகையில், தமிழகத்தில், சேலம், திருப்பத்தூர், சத்தியமங்கலம் பகுதிகளில் சந்தன மரக்கிடங்குகள் உள்ளன. இங்கு கடத்தல் கும்பலிடம் பறிமுதல் செய்த சந்தன மரங்கள், விவசாயிகளிடம் வளர்த்து வெட்டப்பட்ட மரங்கள், வனங்களில் வெட்டப்பட்ட மரங்கள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஈரோடு சத்தியமங்கலம்
அதிலும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் உள்ளதால், இந்த வனப்பகுதி புலிகள் காப்பக பகுதியாக அறிவிக்கப்பட்டு, அந்நியர்கள் செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது.. முலும், சந்தன மரங்களை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து பாதுகாத்தும் வருகின்றனர்.
எனினும் கடத்தல் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கோபி அருகே கெம்மநாய்க்கன்பாளையம் காட்டுப்குதியிலிருந்து சந்தன மரங்களை வெட்டி கேரளாவிற்கு நேற்றிரவு கடத்தப்போவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
பிக்கப் வேனில் மீன் பெட்டிகள்
உடனே கெம்மநாய்க்கன்பாளையம் அருகே உள்ள தாசாரிபாளையம் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.. அப்போது அந்த வழியாக, கேரளா மாநிலம் பதிவெண் கொண்ட பிக்-அப் வேன் ஒன்று வந்தது. அந்த வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது வேனின் முன் பகுதியில், மீன்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.. மீன்களே இல்லாமல் வெறும் பெட்டிகளை குவித்து வைத்திருந்ததை பார்த்து போலீசார் சந்தேகமடைந்து, அந்த பெட்டிகளை ஒவ்வொன்றாக இறக்கி வைத்து சோதனை செய்தனர்
அப்போது சோதனையில் வெள்ளை நிற சாக்கு பைகளில் 450 கிலோ சந்தனமரங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.. அந்த மரங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.. உடனே போலீசார் அந்த சந்தன மர கட்டைகள் இருந்த மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை பறிமுதல் செய்தனர்.
துண்டு துண்டான சந்தன மரங்கள்
இந்த சந்தன மரங்களை மறைத்து கடத்தி வந்த கேரளாவை சேர்ந்த ஜைனுலாபுதின் (45), அப்துல் ரசாக் (50) ஆகியோரை பிடித்து சத்தியமங்கலம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், சந்தன மரங்கள் வெட்டப்பட்ட பகுதி குறித்து விசாரணை அவர்களிடம் நடந்து வருகிறது.
கைதானவர்கள் 2 பேருமே கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதால், உள்ளூரை சேர்ந்தவர்கள்தான் சந்தன மரங்களை வெட்டி கொடுத்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.. எனவே அவர்கள் யார்? கேரளாவில் சந்தன கட்டைகளை யாரிடம் விற்க இருந்தனர்? என்பது குறித்தெல்லாம் வனத்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
ஈரோட்டில் பிடிபட்ட 2 பேர்
கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி சந்தன மர கடத்தல் மன்னன் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் பாப்பாரப்பட்டியில் அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு சத்தியமங்கலம் வனப்பகுதியில் சந்தன மரக்கடத்தல் முற்றிலும் தவிர்க்கப்பட்டது.
20 ஆண்டுகளில் சந்தன மரங்கள் ஓரளவு வளர்ந்துள்ளதால் தற்போது மீண்டும் சந்தன மர கடத்தல் தொடங்கி உள்ளது. கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிடிபட்டு இருப்பதால், ஏற்கனவே வீரப்பனிடம் சந்தன மரங்களை வாங்கிய கும்பல்தான் மீண்டும் சந்தன மர கடத்தலை தொடங்கி உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications