என்னை கைவிட மாட்டீங்க தானே.. மக்களை பார்த்து விஜய் கேட்ட கேள்வி.. எழுந்த கோஷம்!
ஈரோடு: மக்களை நம்பியே அரசியலுக்கு வந்திருக்கிறேன் என்றும், வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன் என்றும் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். அப்போது என்னை கைவிட மாட்டீர்கள் தானே என்று விஜய் மக்களை பார்த்து கேள்வி எழுப்பினார். அப்போது அங்கிருந்த தொண்டர்கள் ஈரோடு அதிர கரகோஷம் எழுப்பினர்.
கரூர் சம்பவத்திற்கு பின் தவெக தலைவர் விஜய் ஒரு மாதத்திற்கும் மேலாக எந்த பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை. காஞ்சிபுரத்தில் மக்களை உள்ளரங்கில் சந்தித்த விஜய், புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தி சந்தித்தார். இதையடுத்து செங்கோட்டையன் தவெகவில் இணைந்த சூழலில், ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஈரோட்டில் விஜய் பேசுகையில், மஞ்சள்.. பொதுவா நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது மஞ்சள் வச்சிதான் ஆரம்பிப்பாங்க.. நம்ம வீட்டில் கூட அம்மா, அக்கா, தங்கைகள் நமக்காக நாம நல்லா இருக்க வேண்டும் என்று மஞ்சள் புடவை கட்டித்தான் வேண்டிக் கொள்வார்கள். மங்களகரமான மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு. அதேபோல் இந்த ஈரோடு மண் விவசாயத்திற்கு பெயர்போன மண்.
எனக்கு நீங்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்து இருக்கிறீர்கள். மக்கள் என்னை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். உங்களை நம்பித்தான் நான் வந்திருக்கேன். தவெக தொண்டர்கள் எனக்கு தைரியம் கொடுத்துள்ளனர். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன். என்ன கைவிட மாட்டீங்க தானே? என்று விஜய் கேள்வி எழுப்பினார்.
அப்போது அங்கு திரண்டிருந்த தவெக தொண்டர்கள் கரகோஷம் எழுப்பியதோடு, விஜய்.. விஜய் என்று கோஷம் போட தொடங்கினார்கள். இது அடங்குவதற்கே சில நிமிடங்களானது. தொடர்ந்து, தவெக தொண்டர் ஒருவர் ஸ்பீக்கர் கட்டியிருந்த பாக்ஸ் மேல் ஏறி நிற்க, விஜய் உடனடியாக அதனை ஒழுங்குபடுத்தினார். அதேபோல் பாதுகாவலர்களும் உடனடியாக அங்கு சென்று தவெக தொண்டரை அப்புறப்படுத்தினார்.
தொடர்ந்து தவெக தொண்டர்கள் அனைவரும் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று விஜய் கூறியதோடு, அதுதான் எனக்கு முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார். வழக்கமாக தவெக தொண்டர்களின் ஒழுங்கின்மையை விஜய் கண்டு கொள்ளாமல் தனது உரையில் மட்டுமே கவனமாக இருப்பார். ஆனால் இம்முறை தொண்டர்களையும் சரி செய்தது அக்கட்சியினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications