ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாதகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக வாக்குவாதம்.. குவிந்த போலீசார்!
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவினர் குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வீரப்பன்சத்திரம் வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக கரூரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினரை போலீசார் அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி, அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்குப் பதிலாக திமுக-வே நேரடியாக களமிறங்கியுள்ளது. வி.சி.சந்திரகுமார் திமுக வேட்பாளராக களமிறங்கினார். அதிமுக, பாஜக உள்ளீட்ட பிரதான கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், நாம் தமிழர் கட்சி சீதாலட்சுமி என்பவரை வேட்பாளராக களமிறக்கியது.

எனவே இந்த இடைத்தேர்தலில் திமுகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் 44 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் 2.25 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், அவர்கள் வாக்களிக்க ஏதுவாக 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. 6 மணி வரை வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டனர். 5 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 64.02% வாக்குப்பதிவு நடந்தது. தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் ஒரு வாக்குச்சாவடியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக திமுகவினர் குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெளியூரில் இருந்து நாம் தமிழர் கட்சியினரை அழைத்து வந்து கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக திமுகவை சேர்ந்த முகவர்கள் குற்றம்சாட்டி, தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
வீரப்பன் சத்திரம் பகுதியில் உள்ள 46வது எண் கொண்ட வாக்குச்சாவடியில், கள்ள ஓட்டு போட முயன்றதாக நாம் தமிழர் கட்சியினர் மீது திமுகவினர் குற்றம்சாட்டினர். இதனால் நாதக - திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதம் முற்றியதால் சூழல் அசாதாரணமாக மாறியது. இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
உடனடியாக தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட காவல்துறை எஸ்.பி ஜவஹர் உள்ளிட்டோர் சம்பவம் நடந்த வாக்குச்சாவடிக்கு வந்தனர். மேலும் அதிகமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். வாக்குச்சாவடியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் போலீசார் அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி வெளியூரில் இருந்து வந்த நாம் தமிழர் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர் போலீசாரிடம் வலியுறுத்தினர். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 நாம் தமிழர் கட்சியினரை போலீசார் அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் வீரப்பன் சத்திரம் வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக நாதகவினர் மீது குற்றம்சாட்டப்பட்டு வாக்குவாதம் நடந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications