
மியான்மரில் கொல்லப்பட்ட 2 தமிழ் இளைஞர்கள்.. 6 நாட்களாகியும் உடல்களை ஒப்படைக்காததால் தொடரும் பதற்றம்
மோரே: மியான்மரில் 2 தமிழ் இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு 6 நாட்களாகியும் இன்னமும் அவர்களது உடல்கள் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் இந்தியா-மியான்மர் எல்லையான மோரே நகரில் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.
மணிப்பூர் மாநிலம் மோரே சிறுநகரம், மியான்மர் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் மியான்மர் நாட்டு வர்த்தகர்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் நாள்தோறும் வந்து வர்த்தகம் செய்ய அனுமதி உண்டு. அதேபோல் மியான்மரின் டாமு நகருக்கும் மோரேவில் இருந்து இந்தியர்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் சென்று வர அனுமதிக்கப்படுவர்.

தமிழ் இளைஞர்கள் படுகொலை
இந்நிலையில் ஜூலை 5-ந் தேதியன்று மியான்மரின் டாமு நகருக்கு சென்ற 2 தமிழக இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த மோகன், அய்யனார் என்ற இளைஞர்கள் மோரேவில் தங்கி வர்த்தகம் செய்து வந்தனர். டாமு நகருக்கு சென்ற போது இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மியான்மர் ராணுவம் அல்லது மியான்மர் ராணுவ ஆதரவு தீவிரவாத குழுதான் இந்த படுகொலைகளை செய்தது என்கின்றன தகவல்கள்.

மோரேவில் தடை உத்தரவு
இப்படுகொலைகளுக்கு நீதி கோரி மோரே நகரிலும் தமிழகத்தின் சென்னையிலும் உறவினர்கள் போராட்டங்களை நடத்தினர். மோரே எல்லையில் நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாகவும் வெடித்தது. மியான்மருக்குள் நுழைந்த மணிப்பூர் இளைஞர்கள் அங்கிருந்த ராணுவ முகாம் ஒன்றை தீக்கிரையாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் மொரேவில் முழு அடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதனைத் தொடர்ந்து மோரே தமிழ்ச்சங்கத்தில் ராணுவம், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மோரே பகுதியில் அமைதி திரும்புவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதனையடுத்து மோரே பகுதியில் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதேபோல் மொரேவில் முழு அடைப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டது.

உடல்கள் ஒப்படைப்பு எப்போது?
இதனிடையே 2 தமிழக இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு 6 நாட்களாகிவிட்டன; ஆனாலும் 2 தமிழ் இளைஞர்களது உடல்கள் இன்னமும் மியான்மரில் இருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்; 2 தமிழ் இளைஞர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் இன்னமும் மோரே எல்லையில் பதற்றம் தொடருகிறது.