ஓசூர் பால் வியாபாரியின் மாஸ்டர் பிளான்! கிருஷ்ணகிரி ராயல் கார்டனில் பாவம் பீகார் பெண்.. ஷாக் பின்னணி
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், வேலை தேடி வந்த வெளிமாநில பெண்ணிற்கு உதவி செய்வது போல நடித்து, ஆள் நடமாட்டமற்ற இடத்திற்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த பால் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.. இது தொடர்பாக போலீசார் துரித விசாரணையை மேற்கொண்டு வந்தாலும், இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது ஓசூரில்?
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அந்த பெண்.. சுமார் 30 வயதிருக்கும்.. திருமணமாகிவிட்டது.. தனது வாழ்வாதாரத்திற்காக வேலை தேடி கடந்த 3 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வந்துள்ளார்.

ஓசூர் பால் வியாபாரி மாஸ்டர் பிளான்
அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்துள்ளது. புதிய இடம் என்பதால், அங்கேயே தற்காலிகமாக தங்கி அவர் பணியைத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தான் தங்கியுள்ள இடத்தில் உள்ள சக ஊழியர்களை தொடர்பு கொள்ள அந்த பெண் முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அப்பெண்ணிடம் செல்போன் இல்லை.. அதனால் யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல் தவித்தபோது, அந்த வழியாக பேகேப்பள்ளி மகாலட்சுமி லே-அவுட் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி மகேஷ் (37) என்பவர் வந்துள்ளார்..
அவரிடம் செல்போன் உதவி கேட்டுள்ளார்.. "யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்? யாரிடம் பேச வேண்டும்?" என்று மகேஷ் விசாரித்தபோது, அந்தப் பெண் தனக்குத் தெரிந்தவர்களின் விவரங்களைக் கூறியுள்ளார்.
ராயல் கார்டன் லே அவுட் தோட்டம்
அப்போதுதான் அந்த பெண் தனிமையில் உள்ளார் என்பதும், உள்ளூரில் யாரையுமே அவருக்கு தெரியாது என்றும் மகேஷூக்கு தெரியவந்தது.. உடனே அப்பெண்ணின் உதவியற்ற நிலையைப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்ட மகேஷ், "நீங்கள் யாரைப் பார்க்க வேண்டுமோ, அவர்களிடம் நானே உங்களை நேரில் அழைத்துச் சென்று விடுகிறேன்" என்று அன்பாக பேசுவது போல நடித்துள்ளார்.. ஆசைவார்த்தையும் சொல்லி உள்ளார்..
இதனை உண்மையென நம்பிய அந்த இளம்பெண், மகேஷின் பைக்கில் ஏறியுள்ளார். ஆனால், அந்தப் பெண் சொல்லிய இடத்திற்கு செல்லாமல், மகேஷ் தனது பைக்கை ஜூஜூவாடி உப்கார் ராயல் கார்டன் லே-அவுட் பகுதியை நோக்கி திருப்பியுள்ளார். ஆள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதிக்குச் சென்றதும் அந்தப் பெண் அச்சமடைந்துள்ளார்.
பீகார் பெண் கதறல்
"நாம் எங்கே போகிறோம்? இது நான் செல்ல வேண்டிய இடம் போல தெரியலையே?" என்று அந்தப் பெண் கேள்வி எழுப்பியிருக்கிறார்.. ஆனால், மகேஷ் அதைக் காது கொடுத்து கேட்காமல் ஆள் அரவமற்ற மறைவிடத்திற்கு வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணை கடத்தி சென்றார்.
அந்தத் தனிமையான இடத்தில் வைத்து, மகேஷ் அந்த இளம்பெண்ணை மிரட்டி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். அந்தப் பெண் எவ்வளவோ போராடியும், காமவெறி பிடித்த மகேஷிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. தனது கொடூரச் செயலை அரங்கேற்றிய பிறகு, அந்தப் பெண்ணை அங்கேயே தவிக்க விட்டுவிட்டு மகேஷ் தனது வாகனத்தில் தப்பியோடி தலைமறைவானார்.
மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தைரியமாக ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், அந்த நபரின் அடையாளங்களையும் விரிவாகத் தெரிவித்தார். இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், உடனடியாக வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ஓசூர் சம்பவம் அதிர்ச்சி
சம்பவம் நடந்த பகுதியில் இருந்த தடயங்கள் மற்றும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த பால் வியாபாரி மகேஷை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. தற்போது மகேஷை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஓசூரில் பட்டப்பகலில் உதவி செய்வது போல நடித்து பெண் கடத்தப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications