போலீஸ் நிலையத்தில் அல்லு அர்ஜுன்.. உயிரிழந்த பெண்ணின் கணவர் கண்ணீர் பேட்டி! தியேட்டரில் நடந்தது என்ன
ஹைதராபாத்: புஷ்பா 2 சிறப்புக் காட்சியின் போது பெண் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் இன்று போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார். இதற்கிடையே இது தொடர்பாகச் சந்தியா தியேட்டரில் உயிரிழந்த பெண்ணின் கணவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
புஷ்பா 2 சிறப்புக் காட்சி திரையிடப்பட்ட சந்தியா தியேட்டருக்கு நள்ளிரவில் திடீரென அல்லு அர்ஜுன் சென்றுள்ளார். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் நிலையத்தில் அல்லு அர்ஜுன்:
இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜுன் போலீஸ் சொன்னதைக் கேட்கவில்லை என்றும் அதுவே முக்கிய பிரச்சினையாக இருந்ததாக ஹைதராபாத் போலீசார் கூறி வருகிறார்கள். அதேநேரம் அல்லு அர்ஜுன் தரப்பு இதைத் திட்டவட்டமாக மறுத்தே வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அம்மாநில ஹைகோர்ட் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. இந்தச் சூழலில் அல்லு அர்ஜுன் இன்று போலீஸ் விசாரணைக்காக ஆஜராகி இருக்கிறார்.
இதற்கிடையே தியேட்டரில் நடந்த சம்பவத்திற்கு அல்லு அர்ஜுன் காரணமில்லை என்று உயிரிழந்த பெண்ணின் கணவர் பாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், போலீசாரிடம் தான் அளித்த புகாரை வாபஸ் பெற தயாராகவே இருப்பதாகவும் கோமா நிலையில் உள்ள தனது மகனின் சிகிச்சைக்கு நடிகர் அல்லு அர்ஜுன் முழுமையாக உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உயிரிழந்த பெண்ணின் கணவர்:
இது தொடர்பாகப் பிரபல ஆங்கில சேனலுக்கு பாஸ்கர் அளித்த பேட்டியில், "எனது மகன் ஸ்ரீ தேஜ், அல்லு அர்ஜுனின் மிகத் தீவிரமான ரசிகன்.. எனது மகன் அடம் பிடித்ததாலேயே சிறப்புக் காட்சிக்கு குடும்பத்துடன் சென்றோம். கடந்த 20 நாட்களாக எனது மகன் கோமாவில் இருக்கிறான். அவன் சில நேரம் கண் விழித்துப் பார்ப்பான். ஆனால், யாரையும் அவனால் அடையாளம் காண முடியவில்லை. இன்னும் எவ்வளவு காலம் சிகிச்சை தர வேண்டும் எனத் தெரியவில்லை.. எனது மகனின் சிகிச்சைக்கு அல்லு அர்ஜுன் தான் உதவி செய்து வருகிறார்" என்றார்.
இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில் மகன் கோமாவில் இருக்கும் நிலையில், தாய் உயிரிழந்தது குறித்து இன்னும் மகளுக்குச் சொல்லவில்லையாம். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எனது மகளுக்குத் தாயின் மரணம் குறித்து இதுவரை சொல்லவில்லை.. சொந்த ஊருக்குப் போய் இருக்கிறார் என்று மட்டுமே சொல்லி இருக்கிறோம். எனது மகளுக்கு இதுவரை என்ன நடந்தது என்பது தெரியாது.
உதவி செய்யும் அல்லு அர்ஜுன்:
சம்பவம் நடந்த நாள் முதல் அல்லு அர்ஜுன் எங்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்தச் சம்பவத்தில் நாங்கள் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. அன்று நடந்தது துரதிர்ஷ்டவசமான சம்பவம் அவ்வளவு தான். இதற்காக யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. அல்லு அர்ஜுன் கைதுக்கு நாங்கள் தான் காரணம் என்று எங்களைத் திட்டுகிறார்கள். ஆனால், அதை எல்லாம் எதிர்த்துப் போராட எங்களுக்கு இப்போது சக்தி இல்லை
நான் போலீஸ் புகாரை வாபஸ் பெற தயாராக இருக்கிறேன். அல்லு அர்ஜுன் கைது குறித்து எனக்குத் தெரியாது. எனது மனைவி உயிரிழந்ததற்கும் அல்லு அர்ஜுனுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று பிறகு பாஸ்கர் கூறினார். முன்னதாக நேற்றைய தினம் தான் புஷ்பா-2 படத்தின் தயாரிப்பாளர்கள் பாஸ்கர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கியிருந்தனர். தயாரிப்பாளர் நவீன் ரூ. 50 லட்சம் காசோலையை பாஸ்கரிடம் நேற்று வழங்கினார்.












Click it and Unblock the Notifications