தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மேகபதி கெளதம ரெட்டி மாரடைப்பால் மரணம் - அதிர்ச்சியில் ஆந்திரா!
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மேகபதி கௌதம் ரெட்டி மாரடைப்பால் இன்று காலை உயிரிழந்தார். இதனால் ஆந்திரா முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசின் தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சராக இருந்தவர் மேகபதி கெளதம ரெட்டி. இவருக்கு வயது 50.
இன்று காலை வீட்டில் இருந்த அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன்பே வீட்டில் மயக்கம் போட்டுள்ளார்.

மாரடைப்பு
இன்று காலை 7.45 மணிக்கு,மூச்சு பேச்சு இல்லாத நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அமைச்சர் மேகபதி கெளதம ரெட்டி. அவருக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டிருப்பதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவருக்கு சிபிஆர் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.16 மணிக்கு அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குடும்பம்
இவர் முன்னாள் ஆந்திர மாநிலத்தின் எம்.பி மேகபதி ராஜ்மோகன் ரெட்டியின் மகன். மனைவி மற்றும் மகளுடன் ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்தார். ஆந்திர மாநிலத்தின் ஆத்மாகூர் தொகுதியில் இருந்து 2014 மற்றும் 2019ல் சட்டசபைக்குத் தேர்வானார் மேகபதி. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், அமைச்சராக தேர்வானார்.

துபாய்
ஆந்திர மாநில தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மேகபதி கௌதம் ரெட்டி அலுவல் ரீதியாக கடந்த ஒருவாரமாக துபாயில் தொழில் அதிபர்களுடன் முதலீடு தொடர்பான கூட்டத்தில் அமைச்சர் மேகபதி கௌதம் ரெட்டி பங்கேற்றார். அமைச்சர் துபாயில் இருந்து நேற்றுதான் ஹைதராபாத் திரும்பினார். இந்நிலையில் அவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் நம்பிக்கைக்குரியவர். மேகபதி கௌதம் ரெட்டியின் மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன் என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். அமைச்சர் மேகபதியின் மறைவுக்கு ஆந்திர அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications