வழிகாட்டும் தமிழகம்.. ஆந்திராவில் மகளிர் இலவச பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் சந்திரபாபு நாயுடு
அமராவதி: தமிழ்நாட்டில் மகளிருக்கு இலவச பேருந்து சேவை நடைமுறையில் இருந்து வருகிறது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ஆந்திராவிலும் மகளிருக்கு இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.
சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் மகளிருக்கான இலவச பயணத்திற்கான டிக்கெட்டை கொடுத்து அவர்களுடன் பேருந்தில் பயணித்திருக்கின்றனர்.

இந்த இலவச பேருந்து பயணத் திட்டத்திற்கு 'ஸ்திரீ சக்தி' என பெயரிடப்பட்டிருக்கிறது. முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடு அமராவதியில் உள்ள பண்டிட் நேரு பேருந்து நிலையத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
துணை முதல்வர் பவன் கல்யாணுடன் பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்த நாயுடு, "இத்திட்டத்தால் மாநிலம் முழுவதும் 2.62 கோடி பெண்கள் பயனடைவார்கள். 'ஸ்திரீ சக்தி' திட்டத்தின் மூலம் பெண்களுக்கு நிதி ஆதரவு கிடைக்கும். சுதந்திர தினத்தன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்தது. நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பெண்களுக்கு அளித்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம். கடந்த காலத்தில், RTC பேருந்துகளில் பெண்களுக்கு இடங்களை ஒதுக்கியிருந்தோம். இப்போது இலவச பேருந்து பயண வசதியை வழங்குகிறேன். இனிமேல், ஒவ்வொரு பெண் குழந்தையும் மாநிலம் முழுவதும் இலவசமாக பயணிக்கலாம்" என்றார்.
இத்திட்டத்திற்காக மாதத்திற்கு 62 கோடி ரூபாயும், ஆண்டுக்கு 1,942 கோடி ரூபாயும் செலவிடப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். தற்போது, APSRTC மாநிலம் முழுவதும் 11,449 பேருந்துகளை இயக்கி வருகிறது, இதில் 8,458 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் 129 பணிமனைகள், 423 பேருந்து நிலையங்கள் மற்றும் நான்கு மண்டலங்களை வலுப்படுத்தி வருவதாக முதல்வர் தெரிவித்தார். PM-e Bus Seva திட்டத்தின் கீழ் 11 பெரிய நகரங்களில் விரைவில் 1,050 மின்சாரப் பேருந்துகள் கொண்டு வரப்படும் என்றும், பார்சல் சேவை மூலம் அதிக வருவாய் ஈட்டி வருவதாகவும் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications