ஸ்ரீசைலம் கோயில் பட்டயத்தில்.. 'இப்படியொரு' மெசேஜ்! 15ம் நூற்றாண்டில் இந்தியா செய்த அறிவியல் சாதனை!
அமராவதி: ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள கோயில் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட செப்பு பட்டயத்தில் 'ஹேலி' வால் நட்சத்திரம் குறித்த தகவல்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 15ம் நூற்றாண்டில் இந்தியர்கள் எவ்வளவு அறிவியல் சிந்தனையுடன் இருந்தார்கள் என்பதற்கு இந்த பட்டயம் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் தொல்லியல் ஆய்வு குழுவினர் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் செப்பு பட்டயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதில் 'ஹேலி' வால் நட்சத்திரம் குறித்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது. பட்டயத்தில் கி.பி. 1456 ஜூன் 28 தேதி என்று குறிப்பிடப்பட்டு வால் நட்சத்திரம் பற்றி எழுதப்பட்டிருக்கிறது.

கி.பி.1456ம் நூற்றாண்டில் ஸ்ரீசைலம் பகுதி விஜயநகர பேரரசு ஆட்சியின் கீழ் இருந்தது. 600 ஆண்டுகளுக்கு முன்னர் வால் நட்சத்திரம் பற்றி துல்லியமாக குறிப்பிடப்பட்டிருப்பது ஆய்வாளர்களை வியக்க வைத்திருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், அமெரிக்கர்கள் இந்த நட்சத்திரத்தை கண்டுபிடிப்பதற்கு முன்னரே, நாம் அடையாளம் கண்டுள்ளோம் என்பதுதான்.
இந்த செப்புப் பட்டயத்தில், விஜயநகர மன்னர் மல்லிகார்ஜுனன், ஒருவருக்கு நிலம் தானமாக வழங்கியதை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பட்டயத்தின் சிறப்பு, அக்காலத்தில் காணப்பட்ட பிரகாசமான வானியல் நிகழ்வான ஹேலியின் வால் நட்சத்திரத்தைப் பற்றிய விரிவான குறிப்பாகும். வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் வானியலாளர்கள் பின்னர்தான் இதை ஹேலி வால் நட்சத்திரம் என்று அடையாளம் கண்டனர்.
ரிக்வேதம், அதர்வண வேதம் மற்றும் பிருஹத் சம்ஹிதா போன்ற பண்டைய நூல்களில் வால் நட்சத்திரங்களைப் பற்றிய குறிப்புகள் இருந்தாலும், எந்தவொரு உண்மையான வானியல் நிகழ்வுக்கும் குறிப்பிட்ட தேதியைக் குறிப்பிடவில்லை. ஸ்ரீசைலம் கல்வெட்டு இந்தியாவில் ஹேலியின் வால் நட்சத்திரத்தைப் பற்றிய ஆரம்பகால உறுதியான கல்வெட்டுக் குறிப்பாகும். இது விஜயநகர காலத்தின் கலாச்சார முக்கியத்துவத்திற்கான சான்றுகளை வழங்குகிறது.
தெலுங்கில் எழுதப்பட்ட இந்த கல்வெட்டு அக்காலத்தின் செப்புத் தகடு மானிய வடிவத்தைப் பின்பற்றுகிறது. நில மானிய விவரங்களுடன் வானியல் நிகழ்வையும் சேர்த்து குறிப்பிட்டிருப்பது, அத்தகைய நிகழ்வுகள் சட்ட, மத மற்றும் நிர்வாக ஆவணங்களில் பதிவு செய்யுமளவிற்கு முக்கியத்துவம் பெற்றிருந்ததை காட்டுகிறது.
இதே காலத்தில் சீனா, ஐரோப்பா மற்றம் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த சமூகங்களும் வால் நட்சத்திரம் பற்றி பதிவு செய்திருக்கின்றன. சீனாவில் பண்டைய காலத்தில் ஆய்வாளர்கள் தொடர்ந்து வானியல் நிகழ்வுகளை துல்லியமாக பதிவு செய்து வந்திருக்கிறார்கள். ஹேலி வால் நட்சத்திரத்தின் கிட்டத்தட்ட ஒவ்வொரு தோற்றமும் சீனப் பதிவுகளில் காணப்படுகின்றன. இந்த நட்சத்திரம் 75-76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தென்படும்.
ஐரோப்பியர்கள், நமக்கு முன்னதாகவே இதனை பதிவு செய்திருக்கிறார்கள். கி.பி 1066 ஆம் ஆண்டு வில்லியம் தி கான்கரர், இங்கிலாந்தைக் கைப்பற்றியபோது ஹேலி வால் நட்சத்திரம் தோன்றியது பேயூ டபேஸ்ட்ரியில் (Bayeux Tapestry) பதிவு செய்யப்பட்டுள்ளது. 1456 ஆம் ஆண்டு மீண்டும் வால் நட்சத்திரம் தோன்றியதும் தோற்றமும் ஐரோப்பிய வானியலாளர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர பாபிலோனியா, பாரசீகம் போன்ற மத்திய கிழக்குப் பகுதிகளிலும் வால் நட்சத்திரங்களின் பதிவுகள் உள்ளன.












Click it and Unblock the Notifications