ஹைதராபாத் ஏரியில் ஆக்கிரமிப்பு.. பாஜக கவுன்சிலரின் தொழிற்சாலை உள்பட பல கட்டிடங்கள் இடிப்பு
ஹைதராபாத்: ஹைதராபாத் பேரிடர் மறுமொழி மற்றும் சொத்துகள் கண்காணிப்பு பாதுகாப்பு அமைப்பு, மாநகரின் பல்வேறு ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிரடியாக இடித்து அகற்றி வருகிறது. அந்த வகையில் அப்பாச்சேவூரில் உள்ள ஏரியை ஆக்கிரமித்து இருந்தததாக பாஜக கவுன்சிலரின் கட்டிடங்கள் உள்பட பலரது கட்டிடங்களை அதிகாரிகள் இன்று அதிரடியாக இடித்து அகற்றினார்கள்.
ஐடி துறையில் முன்னணியில் உள்ள ஹைதராபாத் மாநகரத்தின் ஏரிகள் கடந்த 20 ஆண்டுகளில் அதிக அளவு ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி உள்ளது. அதனை அகற்றும் நடவடிக்கையில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு இறங்கி உள்ளது.

அதன்படி, ஹைதராபாத் ஏரியில் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறி நடிகர் நாகர்ஜூனாவின் என் கன்விக்சன் கட்டிடத்தை ஹைத்ரா அதிகாரிகள் அதிரடியாக இடித்து தள்ளினார்கள். அதனை தொடர்ந்து ஏஐஎம்ஐஎம் தள தலைவர் அக்பருதீன் ஓவைசியின் சாலார்-இ-மில்லத் கல்வி அறக்கட்டளை நடத்தும் பாத்திமா ஒவைசி கல்லூரி, பிஆர்எஸ் எம்எல்ஏ பல்லா ராஜேஷ்வர் ரெட்டிக்கு சொந்தமான அனுராக் கல்வி நிறுவனங்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் மற்றும் மல்லா ரெட்டியின் குடும்பம் நடத்தும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை இடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,
இந்நிலையில் துர்கம் செருவு ஏரியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிகள், முதல்வர் ஏ ரேவந்த் ரெட்டியின் சகோதரர் திருப்பதி ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட பல முக்கிய கட்டிடங்களை இடிக்கப் போவதாக நோட்டீஸ் அனுப்பினார்கள். இதேபோல் அந்த பகுதியில் உள்ள பலரது வீடுகள் இடிக்கப்பட உள்ளது. இதற்கான நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. துர்கம் செருவு மட்டுமின்றி ஹைதராபாத் மாநகரம் கடந்த 2020ம் ஆண்டு வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்க காரணமான அத்தனை ஏரிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஹைதராபாத் பேரிடர் மறுமொழி மற்றும் சொத்துகள் கண்காணிப்பு பாதுகாப்பு அமைப்பின் (HYDRA) அதிகாரிகள் இன்று ஹைதராபாத்தின் ககன்பஹாட்டில் உள்ள அப்பச்சூர்வு என்ற இடத்தில் தொழிற்சாலை கட்டமைப்புகளை அதிரடியாக அகற்றினார்கள். ஏரியை முழுமையாக ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் கட்டுமானங்களைக் குறிவைத்து இடித்து தள்ளி வருகிறார்கள். இன்று இடிக்கப்பட்ட கட்டிடங்களில் மைலார்தேவப்பள்ளி பாஜக கவுன்சிலர் தோகலா ஸ்ரீனிவாஸ் ரெட்டிக்கு சொந்தமான கட்டிடங்களும் இருக்கிறது.
ஹைதராபாத் பேரிடர் மறுமொழி மற்றும் சொத்துகள் கண்காணிப்பு பாதுகாப்பு அமைப்பு (ஹைட்ரா) கமிஷனர் ஏ.வி. ரங்கநாத் இதுபற்றி கூறுகையில், அப்பச்சூர்வு பகுதியில் 34 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த ஏரி, பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளால், தற்போது வெறும் 10-12 ஏக்கராக சுருங்கிவிட்டது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி ஹைதராபாத் மாநகரம் வெள்ளத்தின் போது, இப்பகுதியில் கணிசமானோர் இறந்து போனார்கள். பலர் உடைமைகளை இழந்துள்ளனர் என்றார்.
இதனிடையே இயற்கை ஆர்வலரான லுப்னா சர்வத் இதுபற்றி கூறும் போது, ஏரி வழியாக சாலை அமைப்பது மற்றும் ஆக்கிரமிப்புகள் காரணமாகவே கடந்த 2020ம் ஆண்டு வெள்ளப் பிரச்சினைகள் அதிகமாக ஏற்பட்டது என்று சுட்டிக்காட்டினார்.
இதனிடையே பாஜக கவுன்சிலர் தோகலா ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்து பேசுகையில், இடிக்கப்பட்ட சில கட்டிடங்கள் எனக்குச் சொந்தமானது தான். அந்த நிலம் 1980 களில் இருந்து எங்கள் குடும்பத்தின் சொத்து ஆகும். இடிக்கப்பட்டது பட்டா நிலம் தான், இடிப்புக்கு முன் பதிலளிக்க போதிய அவகாசம் கூட வழங்கப்படவில்லை. உரிய நடைமுறை இல்லாமல் இந்த இடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு நிலுவையில் இருக்கிறது. அதிகாரிகள் மூன்று முதல் நான்கு ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் வருகிறது என்று கூறுகின்றனர். அவர்கள் எப்படி முன்னறிவிப்பின்றி இயங்கும் தொழிற்சாலைகளை இடிக்க முடியும்" என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications