அம்பேத்கர் சிலை திறப்பு விழா: முதல்வர் கேசிஆரின் செயலால் அப்செட் ஆன ஆளுநர் தமிழிசை.. ஆதங்கம்
ஹைதராபாத்: சட்ட மேதை அம்பேத்கரின் 125 அடி உயர சிலை நேற்று முன் தினம்(ஏப்ரல் 14) தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ்-ஆல் திறந்து வைக்கப்பட்டது. இதில் ஆளுநர் தமிழிசை கலந்துகொள்ளவில்லை. இந்த சூழலில், அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலமாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இடையூறு கொடுப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. தமிழ்நாடு, தெலுங்கானா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளும் அரசுக்கும் மாநில ஆளுநர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

மாநில சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது... திருப்பி அனுப்புவது என மக்கள் பிரதிநிதிகளின் முடிவிற்கு எதிராக செயல்படுவதாக இந்த மாநில அரசு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. தமிழ்நாட்டிலும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பை அரசு பதிவு செய்து வருகிறது.
இதையடுத்து மசோதாக்களுக்கு உரிய காலத்துக்குள் ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசும், குடியரசுதலைவரும் தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில், கடந்த 10-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே நாளில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
தெலுங்கானா மாநிலத்திலும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போடுவதாக அந்த மாநில அரசு விமர்சனம் செய்து வருகிறது. மாநில அரசுடன் மோதல் போக்கை கையாண்டு வருவதால் மரபுப்படி ஆளுநருக்கு அளிக்க வேண்டிய உரிய மரியாதைகளையும் தெலுங்கானா அரசு கொடுப்பதில்லை என ஆளுநர் மாளிகை தரப்பில் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தெலுங்கானாவில் நாட்டிலேயே மிக உயரமான அம்பேத்கர் சிலை கடந்த 14 ஆம் தேதி திறக்கப்பட்டது. அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளையொட்டி 125 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு இருந்த அந்த சிலையை மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார். பிரம்மாண்டமாக நடைபெற்ற அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொள்ளவில்லை.
மாநிலத்தில் மிகவும் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற இந்த சிலை திறப்பு விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொள்ளாதது அப்போதே கவனம் பெற்றது. இந்த சூழலில், அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
ஒரு மிகப்பெரும் நிகழ்ச்சியாக நடைபெற்றது. எனக்கு எந்த ஒரு அழைப்பும் கொடுக்கப்படவில்லை. எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தால் நான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பேன். அம்பேத்கர் அரசியல் அமைப்பின் தந்தை மட்டும் கிடையாது. நாட்டின் அதிகாரம் குறித்தும் பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பது குறித்தும் அவர் வலியுறுத்தி பேசியிருக்கிறார். ஆனால், அவரது சிலை திறப்பு விழாவிற்கு பெண் ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications